
செய்திகள் மலேசியா
சட்டவிரோத குடியேறிகளின் முதலாளிமார்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் துறை அறிவிப்பு
கோலாலம்பூர்:
அண்மையில் குடிநுழைவு துறை மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட ஆவணங்களற்ற 156 வெளிநாட்டு குடியேறிகளின் முதலாளிமார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று சைபர் ஜெயா பகுதியில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அக்குடியேறிகளுக்கு உரிய தங்குமிட வசதி செய்துகொடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதன்பேரில் சம்பந்தப்பட்ட முதலாளிமார்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது.
சட்டவிரோத இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த மிகவும் அசுத்தமாக இருந்தது என்றும் தங்குவதற்கு அறவே பொருத்தமற்ற இடம் அது என்றும் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் கைருல் தெரிவித்திருந்தார்.
மேலும், கழிவுநீர் வடிகால், குடிநீர் வசதி ஆகியவற்றுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில் கழிவறைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேறி குடியேறிகள் புழங்கும் இடம் வரை வந்திருப்பதாக அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந் நிலையில் சம்பந்தப்பட்ட முதலாளிமார்கள் மீது 446 சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறையின் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்ததாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் முதலாளிமார்களுக்கு 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தொழிலாளர் துறை கூறுகிறது. 466 சட்டப்பிரிவை மீறிய குற்றத்தின் பேரில் கடந்த மாதம் 45முதலாளிமார்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு 332,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் துறை மேலும் தெரிவித்துள்ளது.