
செய்திகள் மலேசியா
மேலும் ஒரு தடுப்பூசியைப் பரிசோதிக்க தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
கோலாலம்பூர்:
நாட்டில் மேலும் ஒரு தடுப்பூசியைப் பரிசோதிக்க தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
Sars-Cov-2 என்ற அந்த சீனத் தயாரிப்புத் தடுப்பூசிக்கு மே 28ஆம் தேதி இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள 8 ஆய்வு மையங்களில் இந்தப் புதிய தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை (clinical study) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட மொத்தம் மூவாயிரம் பேரிடம் இப்புதிய தடுப்பூசி பரிசோதிக்கப்படும் என்றும் அதற்கு 15 முதல் 19 மாதங்கள் வரை ஆகக்கூடும் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் கூறினார்.
மலேசியா மட்டுமல்லாமல் கொலம்பியா, அர்ஜென்டினா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், உக்ரைன் ஆகிய நாடுகளும் இப்பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
அவசரகால பயன்பாட்டுக்கென இந்தத் தடுப்பூசிக்கு சீன அரசாங்கம் கடந்த மே 14ஆம் தேதி அனுமதி அளித்திருப்பதாக தெரிய வருகிறது.