
செய்திகள் மலேசியா
ஆவணமற்ற வெளிநாட்டு குடியேறிகள் மீதான நடவடிக்கை: தடுத்து நிறுத்த அமைச்சர் கைரிக்கு NGOக்கள் கோரிக்கை
கோலாலம்பூர்:
தகுந்த ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு குடியேறிகளை கைது செய்யும் உள்துறை அமைச்சின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என அமைச்சர் கைரி ஜமாலுதீனை அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
தடுப்பூசி போடும் வேளையில் அத்தகைய குடியேறிகளிடம் உரிய ஆவணங்கள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுதீன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்தே அரசு சார்பற்ற அமைப்புகள் தங்கள் கோரிக்கையை வெளியிட்டுள்ளன.
"ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து உள்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் இந்த விவகாரத்தை எப்படி அணுகுவது என்பது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறியிருந்தார்.
"ஆனால் அவர் இவ்வாறு கூறி ஒரு வாரம் கடந்துவிட்டது. அவர் இன்னும் மவுனம் காப்பது கவலை அளிக்கிறது," என்கிறார் டெனாகனிதாவின் (Tenaganita) செயல் இயக்குநரான க்ளோரின் தாஸ் (Glorene Das).
எனினும் தான் அளித்த வாக்குறுதியை கைரி நிறைவேற்றுவார் என தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், நாட்டில் இத்தனை ஆவணங்கள் அற்ற குடியேறிகள் இருப்பதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
"உள்துறை அமைச்சு வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாகவும் அடிப்படைக் கொள்கையுடனும் செயல்படுகிறது எனில் நாட்டில் ஆவணமற்ற குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்தது ஏன் என்பது விளக்கப்பட வேண்டும்.
"மலேசியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து புலம்புவதற்குப் பதிலாக, உள்துறை அமைச்சு உடனடியாக குடிநுழைவு முறையை சீரமைத்து தகுந்த, சரியான தலைமைத்துவத்தின் கீழ் அதை முறைப்படுத்த வேண்டும்," என்று க்ளோரின் தாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக ஆவணங்கள் அற்ற குடியேறிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளுடன் அமைச்சர் கைரி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள அக்குடியேறிகள் முன்வரும் வகையில் அவர்களுடைய நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் க்ளோரின் தாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
"கொரோனா விவகாரம் தலைதூக்கி ஓராண்டும் மேலாகிறது. இன்னும் கூட ஆவணங்கள் அற்ற குடியேறிகள் குறித்து அரசாங்கம் ஒருமித்த கருத்தை எட்டவில்லையா? இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவில்லை என்ற காரணத்தை முன்வைக்கக் கூடாது.
"சட்டவிரோத, ஆவணங்கள் அற்ற குடியேறிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் எனில் அதற்கான தெளிவான நடைமுறை என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தேவை. இவ்விஷயத்தில் அரசாங்கம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும்," என்கிறார் North-South Initiative-ன் இயக்குநர் ஆட்ரியன் ஃபெரைரா (Adrian Pereira).