நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

ஐம்பது ரிங்கிட் சொன்ன வாழ்க்கைத் தத்துவங்கள்..! - டாக்டர் முஹிய்யித்தீன் காஜி / வெள்ளிச் சிந்தனை

அந்த மனிதரின் முகம் கருத்து, களைத்து, சோர்ந்து இருந்தது. சொக்காயும் கால் சட்டையும் அழுக்குப் படிந்து, கிழிந்து கிடந்தன. பசியும் பரிதாபமும் அந்த மனிதரின் முகத்தை அப்பியிருந்தன. 

அவர் MAY BANK வாசலில் படுத்துக் கிடந்தார். சூரியனின் கதிர்கள் நெருங்கி, நெருங்கிச் சென்று அந்த மனிதரின் மார்பு வரை பாய்ந்திருந்தன. ஆனால் அவற்றின் தகிப்பை அவர் இன்னும் உணராதவராக இருந்தார். பசியின் கொடுமையால் அவர் இரவு முழுக்க தூக்கமின்மையால் தவித்துப் போய் இருக்க வேண்டும். 

அவரை அந்த இடத்தில் அந்தக் கோலத்தில் பார்த்த நான் சிந்தனையில் மூழ்கி விட்டேன். மனத்துக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள்..!

‘இந்தப் பிச்சைக்காரருக்கும் இலட்சக்கணக்கான பணத்தாள்களைக் கொண்ட கிடங்குக்கும் சில அடி தூரம் தான். இறைவன் மீது ஆணையாக! இந்த உலகம் முரண்பாடுகளால்நிறைந்தது’ என்று விதவிதமான சிந்தனைகள் மனத்தை ஆக்கிரமித்திருந்தன. 

நான் வங்கிக்குள் போகாமல் இரண்டு கைகளையும் கால் சட்டைப் பைகளுக்குள் நுழைத்துக் கொண்டு அந்த மனிதரையே பார்த்தவாறு யோசித்துக் கொண்டு நின்றேன். 

அப்போது திடீரென்று என்னுடைய கால்சட்டைப் பையின் உள் பைக்குள் ஏதோ ஊர்கின்ற உணர்வு. நான் டக்கென்று அதனை அப்படியே அழுத்தி வெளியில் எடுத்தேன். 
வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டேன். 
ஐம்பது ரிங்கிட் தாள்..!

நான் கேட்டேன் : என்னுடைய பாக்கெட்டுக்குள் உனக்கு என்னதான் பிரச்னை? வெளியே வர வேண்டும் என்று ஏன் ஊர்ந்து, தவித்து, தகித்து உன் இருப்பை உணர்த்தினாய்? 

ஐம்பது ரிங்கிட் தாள் : நான் கடந்த ஒரு வாரமாக உன்னுடைய கால் சட்டைப் பைக்குள் கிடக்கின்றேன். ஆனால் நீயோ என்னுடன் நல்ல முறையில் நடக்கவே இல்லை. என்னை எதற்காக படைத்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற எண்ணம் கூட உனக்கு வராமல் போனதே!

நான் : உன்னுடைய படைப்பின் நோக்கம் தான் என்ன? எதற்காக நீ படைக்கப்பட்டாய்?

ஐம்பது ரிங்கிட் தாள் : பதில் ரொம்ப சிம்பிள். உன்னுடைய சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக என்னைப் பயன்படுத்திக் கொள்வதோடு நின்றுவிடாமல் அல்லாஹ்வின் அடியார்களுக்காகவும் நீ என்னை செலவிட வேண்டும். மேலும் நன்மையான, மக்களின் துயர் துடைக்கின்ற, மக்களுக்குப் பயன் அளிக்கின்ற பணிகளில் என்னைச் செலவிட வேண்டும்.
 
நான் : அது சரிதான். நீ என்னிடம் எப்படி வந்து சேர்ந்தாய் என்பதைச் சொல்!

ஐம்பது ரிங்கிட் தாள் : என்னுடைய கதை ரொம்ப பெரிசு. நான் நிறைய பேர்களின் கைகளில் தவழ்ந்து, விளையாடி இங்கு உன்னிடம் வந்து சேர்ந்திருக்கின்றேன். ஒரு பெரிய மனிதர் எனக்குப் பதிலாக மது பானத்தை வாங்கினார். இன்னொரு ஆசாமி சிகரெட் வாங்கினார். வேறொருவரோ இன்னொருவரிடம் என்னை இலஞ்சமாக ஒப்படைத்துவிட்டுச் சென்றார். அந்த ஆள் உம்மிடம் மளிகைப் பொருள்களை வாங்கினார். அதனால் சென்ற வெள்ளிக் கிழமையிலிருந்து நான் உன்னுடைய பாக்கெட்டுக்குள் இருக்கின்றேன். அவர்கள் எல்லோருமே பணத்தைப் பூஜிக்கின்றவர்கள். உன்னைப் பற்றி எனக்கு இன்னும் அதிகமாகத் தெரியாது. 

நான் : அவர்கள் பணத்தைப் பூஜிக்கின்றவர்கள் என்று நீ எப்படி அறிந்து கொண்டாய்? 

ஐம்பது ரிங்கிட் தாள் : அவர்கள் என்னுடன் நடந்துகொண்ட விதமே அதற்குச் சான்று. இதனால்தான் இமாம் ஹஸன் பஸரி(ரஹ்) சொன்னார் : ‘ஒவ்வொரு சமூகத்துக்கும் அந்த சமூகத்தார் வணங்கி வழிபடுவதற்கான சிலை இருக்கும். இந்த சமூகத்தின் சிலை தீனாரும் திர்ஹமும்தாம் (ரூபாய்த்தாள்களும் காசுபணமும்தாம்). 

இன்னொன்றையும் நன்றாக காது கொடுத்துக் கேட்டுக் கொள். நீ என்னை நன்மையான காரியங்களில் செலவிடத் தவிர்த்தாய் எனில் நான் உன்னை எரித்து விடுவேன்.

நான் : என்ன அது? என்ன சொல்கின்றாய், நீ? என்னை எரித்துவிடுவாயா? 

ஐம்பது ரிங்கிட் தாள் : ஆமாம். வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் அறிவித்திருக்கின்றான்: 

எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை உண்டு எனும் ‘நற்செய்தி’யினை நீர் அறிவிப்பீராக. ஒரு நாள் வரும். அந்நாளில் இதே தங்கமும் வெள்ளியும் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - இவைதாம் நீங்கள் உங்களுக்காக சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே நீங்கள் கேசகரித்து வைத்திருந்த செல்வத்தைச் சுவையுங்கள். (அத்தியாயம் 9 அத்தவ்பா 34 - 35)

நான் :  நீ மிகவும் ஆபத்தான ஆளாக இருக்கின்றாயே!

ஐம்பது ரிங்கிட் தாள் : நான் இதற்கு முன்பு எந்த மனிதர்களின் கைகளில் இருந்தேனோ அவர்களின் நிலைமைகளை சற்றே எண்ணிப் பார். அவர்கள் தீமைகளை விதைத்துக் கொண்டு இருந்தார்கள். நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டு இருந்தார்கள். ஆல மரத்தில் திராட்சைக் கொத்துக்கள் தொங்கியதை நீ எங்கேனும் பார்த்திருக்கின்றாயா? அவர்கள் செல்கின்ற அந்தப் பாதையைக் குறித்து நீ விழிப்போடு இரு. மறந்தும் அந்தப் பாதையின் பக்கம் ஏறெடுத்தும் பார்த்துவிடாதே.

வங்கி வாயிலில் படுத்து சுருண்டு கிடக்கின்ற இந்த மனிதரைப் பார். அவரிடம் என்னை ஒப்படைத்துவிடு. நான் மறுமைநாளில் உனக்கு ஆதரவாக சாட்சி சொல்வேன். உனக்குள் சுஃப்யான் பின் அய்னியா(ரஹ்) அவர்களின் உணர்வை உருவாக்கிக் கொள். 

நான் : இந்த அய்னியா(ரஹ்) யார்? கேள்விப்பட்டதே இல்லையே. அவர் என்ன மாதிரியான உணர்வை வைத்திருந்தார்? கொஞ்சம் விரிவாகத்தான் சொல்லேன். 

ஐம்பது ரிங்கிட் தாள் : தாபயீன்களில் தனி முத்திரை பதித்த மகத்தான மனிதர் அவர். நன்மையான வேலைகளிலும் நல்லறங்களிலும் முந்திக்கொண்டு மும்முரமாக இயங்கியவர் அவர்.
 
ஒரு முறை தம்முடைய மாணவருடன் கடைத் தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் யாசகர் ஒருவர் அவரிடம் யாசகம் கேட்டார்.

அந்த நாள் அந்தப் பொழுதில் அவரிடம் கொடுப்பதற்கு எதுவுமே இருக்கவில்லை. இல்லையே என்றார். யாசகரும் போய் விட்டார். 

ஆனால் அய்னியா(ரஹ்) அவர்களோ ஓவென குமுறி அழத் தொடங்கிவிட்டார். 

மாணவர் வியப்புடன் வினவினார். ‘கண்ணியத்துக்குரிய ஆசானே! ஏன் அழுகின்றீர்? என்ன ஆயிற்று,’ 

அவர் சொன்னார்: ‘ஒருவரிடம் நன்மை எதிர்பார்க்கப்பட அவரால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போவதை விட வாய்ப்புக்கேடு வேறு உண்டா?’ 

நான் : ஆஹா இது ரொம்ப நுட்மான உணர்வாக இருக்கின்றதே! 

ஐம்பது ரிங்கிட் தாள் : அந்த உணர்வை உன்னிடமும் ஏற்படுத்திக் கொள். இப்போது உன்னுடைய இந்த இளமை ததும்பும் பொற்காலத்தை மதித்து நடந்து கொள். ஏனெனில் இப்போது செய்கின்ற நல்லறங்களுக்கும் ஸதகாக்களுக்கும் நற்கூலியும் நன்மையும் பன்மடங்கு அதிகமாகக் கிடைக்கும்.

நான் : என்ன சொல்கின்றாய்? நல்லறங்களுக்கான சிறப்பும் நன்மையும் இளமையில் வேறு, முதுமையில் வேறாக இருக்குமா? 

ஐம்பது ரிங்கிட் தாள் : ஆமாம். ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்தார். கேட்டார்: 

‘இறைவனின் தூதரே! எல்லாவற்றையும் விட மிகப் பெரும் சதகா எது?’

நபிகளார்(ஸல்) பதில் கூறினார்கள்: 

‘நீங்கள் நோய் நொடி இல்லாமல் உடல்நலத்துடன் இருக்கின்ற நிலையில், பணத்தின் மீதும் பொருளின் மீதும் மனத்தில் ஆசை இருக்கின்ற நிலையில், வறுமைக்காளாகிவிடுவோமோ என்கிற அச்சம் வாட்டுகின்ற வேளையில் செய்கின்ற சதகா தான்’. 

இதற்கு விளக்கம் அளிக்கின்ற போது அல்லாமா இப்னு பதால் (ரஹ்) கூறினார்: ‘உடல்நலமும் உடல் வலிமையும் இருக்கின்ற போது பணத்தின் மீதான மோகமும் அதிகமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட நிலையிலும் ஒருவர் சதகா செய்கின்றார் எனில் அவருடைய அந்த நல்லறம் உண்மையான எண்ணத்தின் வெளிப்பாடாக, பெரும் நன்மை அளிக்கக்கூடியதாய் அறிவிக்கப்பட்டது.

அதற்கு நேர்மாறாக முதுமையை எட்டிப் பிடித்துவிட்டுள்ள மனிதர் வாழ்க்கையே வெறுத்துப் போனவராக இருப்பார். மேலும் தன்னிடம் இருக்கின்ற செல்வமும் பணமும் இப்போது மற்றவர்களின் வசம் சென்றுவிடும் என்பதை அவர் தெள்ளத் தெளிவாக உணர்திருப்பார்.’

நான் : இறைவன் மீது ஆணையாக! உன்னுடைய பேச்சும் சொல்லும் என் இதயத்துக்குள் மூடப்பட்டுக் கிடந்த எத்தனையோ கதவுகளைத் திறந்துவிட்டது. ஆனாலும் நீதான் எல்லாக் குழப்பங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றாய் என்று உனக்குத் தோன்றவில்லையா? 

ஐம்பது ரிங்கிட் தாள் : நிச்சயமாக நான் தான் ஃபித்னா - பெருங் குழப்பம் ஆவேன். பொதுவான மனிதர்களின் பேச்சை விடு. எத்தனை எத்தனை ஆலிம்களும், தக்வாதாரிகளும், மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பவர்களும் என்னுடைய கிடுக்கிப்பிடியில் சிக்கிக் கிடக்கின்றார்கள் தெரியுமா? 

நிறைய பேரை நீ பார்த்திருக்கலாம். அவர்களின் மார்க்கப் பேணுதலான ஆடை ஒழுங்குகளும் இறையச்சத்தால் மின்னுகின்ற புறத் தோற்ற அடையாளங்களும் உன்னுடைய மனத்தை ஈர்க்கும். சலாம் சொல்லத் தோன்றும். ஆனால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனில் ரூபாய்த்தாளின் படப்படப்பையும் தங்கத்தின் ஜொலிப்பையும் பார்த்து மகுடத்துக்குக் கட்டுப்படும் பாம்பாய் மாறிப் போகின்றவர்கள்தாம் அவர்கள். 

நான் : நீ சொல்வதும் சரிதான். இறைவன் என்னை எல்லாவிதமான குழப்பங்களிலிருந்தும் காப்பாற்றுவானாக! மேலும் எனக்கு போதும் என்கிற பொன் செய்யும் மருந்தை, எளிமையான வாழ்வை அளிப்பானாக! ஆமீன். 

பிறகு நான் வங்கி வாயிலில் படுத்துக் கிடந்த மனிதரிடம் சென்றேன்.

அவருடைய தோளில் மென்மையாக கை வைத்து, ‘ஐயா!’ என்று அழைத்தேன்.

அந்த மனிதர் திடுக்கிட்டு கண் திறந்து பார்த்தார். 

'பயப்பாடதீங்க. இந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லியவாறு ஐம்பது ரிங்கிட்  தாளை நீட்டினேன்.

அவர் பளப்பளப்பான அந்த ஐம்பது ரிங்கிட்  தாளை சிறிதும் பொருட்படுத்தாமல் என்னை ஏறெடுத்துப் பார்த்தார். 

வேண்டாம் என்று சொல்லியவாறு என்னைப் பார்த்தால் பிச்சைக்காரர் என்றா நினைத்தீர்? என்று கூறினார்.

நான் சொன்னேன் : இல்லை ஐயா. நான் அப்படி நினைக்கவில்லை. இது உங்களுக்குத் தேவைப்படுமே என்றுதான் நினைத்தேன். 

பல முறை சொன்ன பிறகு, அவர் தயக்கத்துடன் அந்தத் தாளை வாங்கிக் கொண்டார். 

அந்த ஐம்பது ரிங்கிட் தாள் என்னைப் பார்த்து சிரித்தது.

- டாக்டர் முஹிய்யித்தீன் காஜி

தமிழில்: லுத்ஃபுல்லாஹ் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset