
செய்திகள் சிந்தனைகள்
பிராமணர் அல்லாதவர் கதா காலட்சேபம் செய்யக் கூடாதா? அவரவர் குலத் தொழிலை அவரவர் செய்ய வேண்டுமாம்
பிராமணர் அல்லாதவர் கதா காலட்சேபம் செய்யக் கூடாதாம். செய்தால் கடும் தண்டனையை அமல்படுத்தி தண்டிக்கும் சூழல்கள் இன்றும் நிலவுகிறது! இதை அகில இந்திய பிராமண சபை நியாயப்படுத்துவதா..? நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் நாம் நவீன இந்தியாவில் தான் வாழ்கிறோமா…? என அதிர்ச்சி தருகிறது;
பிராமணர்கள் இந்துக்களின் தலைமை பீடத்துக்கு உரியவர்களாம்! இந்துக்களின் பாதுகாவலர்களாம். அப்படி என்றால், பகவத் கீதையின் பெருமையை பேசும் ஒரு சாதாரண இந்துவை போட்டு இந்த சாத்து சாத்துவது ஏன்? என்று நமக்கு புரியவில்லை.
விவகாரம் இது தான்;
உத்திரபிரதேசத்தில் எட்டவா என்ற மாவட்டத்தில் ஒரு கோவில் திருவிழா.
ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து பணம் போட்டு செய்கிறார்கள். உ.பியில் இந்து மத புராணங்களை ஆகா, ஒகோவென்று பேசி கதாகாலட்சேபம் செய்வதற்கு பேர் போனவர் முகுந்த் மணி யாதவ். இவர் சுமார் 15 வருடங்களாக பட்டிதொட்டியெங்கும் கதாகாலட்சேபம் ஆற்றி வருகிறார்.
மிக எளிமையாகவும், நகைச்சுவையாகவும் எளியோர்களும் ரசிக்கும்படி பேசுவதால் இவருக்கு ஒரு மவுசு ஏற்ப்பட்டுள்ளது. இது உ.பி.பிராமணர்களுக்கு பிடிக்கவில்லை. உ.பி.அரசியலில் பிராமணர்கள் சக்தி வாய்ந்தவர்கள். ஏனென்றால், மக்கள் தொகையில் அங்கு 10 சதவிகிதம் உள்ளனர். ’காலம் காலமாக தாங்கள் செய்து வந்த கதா காலட்சேபத்தை இப்படி பிராமணரல்லாதவர்களும் செய்து நம் பிழைப்பை கெடுக்கிறார்கள்’ என்கிற ஆத்திரம் அவர்களுக்கு நெடு நாட்களாகவே இருந்துள்ளது.
இந்த நிலையில் முகுந்த் மணி யாதவ் கதா காலாட்சேபத்தை செய்யும் போதே, ”நீ யார்? உன் ஜாதி என்ன?” என கூட்டத்தில் இருந்தவாறே குரல் எழுப்பி உள்ளனர். ”இப்போது இந்தக் கேள்வி இங்கு அவசியம் இல்லாதது” என்று அவர் கூறியுள்ளார். ஏனெனில், அவரது பெயரிலேயே ‘யாதவ்’ என ஜாதி பெயர் தொற்றிக் கொண்டுள்ளது. ஆனால், பிராமணர்கள் விடவில்லை. ”சொல்லுடா, என்ன பயமா..?” என்று கேட்டு கல் எறிந்து கலாட்டா செய்துள்ளனர்.
பிறகு முகுந்த் மணியையும் அவரது உதவியாளர் சந்த் சிங்கையும் அழைத்துச் சென்று மொட்டை அடித்து மீசையை வழித்து விட்டு, மூஞ்சியில் காலால் அழுத்தி விட்டு மூத்திரம் அடித்துள்ளனர். ”பிராமணர் அல்லாதவங்க கதா காலட்சேபம் செய்தால் தீட்டு. அந்த தீட்டை தீர்க்கவே இந்த மூத்திர அபிசேகம்” எனக் கூறியுள்ளனர்.
”நீங்க யாதவ் சமூகத்தினர் மாடு மேய்க்கவும், மாட்டு பாலை விற்கவும் தான் வேண்டுமே ஒழிய, கதாகாலாட்சேபம் செய்யக் கூடாது. அவரவர் குலத் தொழிலை அவரவர் தான் செய்ய வேண்டும்.” என எச்சரித்துள்ளனர். இத்துடன் விடாமல், ”உன்னுடைய காலட்சேபத்தை பெண்கள் கேட்டுவிட்டனர். அந்த பாவ காரியத்திற்கு பிராசித்தமாக ஒரு பெண்மணியின் காலில் விழு” என விழ வைத்துள்ளனர். மேலும் அவரிடம் உள்ள ரூ 25,000 த்தையும், தங்க செயினையும் பறித்து அனுப்பி உள்ளனர்.
இதனால் முகுந்த் மணி காவல் நிலையம் சென்று புகார் தருகிறார். உடனே அகில இந்திய பிராமண சபையினர் பொங்கி எழுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரியை சந்தித்து ஒரு பிராமணப் பெண்ணை வைத்து பாலியல் புகார் தருகிறார்கள் முகுந்த் மணி மீது. முகுந்த் மணி யாதவ் கிராமத்தார் அழைப்பில் தான் வந்தார். அவர்கள் பராமரிப்பில் தான் இருந்தார். இந்த அட்டூழியக் குற்றச்சாட்டை கிராமத்தார் ஏற்கவில்லை.
இத்துடன் நில்லாமல், ‘தன்னை பிராமணன் என பொய் கூறி கதா காலட்சேபம் செய்துள்ளார்’ என்ற வழக்கும் முகுந்த் மணி யாதவ் மீது காவல்துறையில் பதிவாகி உள்ளது. தன் பெயரிலேயே சாதியொட்டு இருக்கும் ஒருவர் தன்னை வேறுசாதியினராக எப்படிச் சொல்லி இருக்க முடியும்…? அதுவும் ‘யாதவ்’ என்பதாகவே பிரபலமாகி இருக்கிறார்! இது தான் உ.பி. அரசின் நிலைபாடு. இந்த தகவல்கள் உ.பியில் பெரு வாரியாக இருக்கும் யாதவ் சமூகத்தினரை களத்தில் இறக்கிவிட்டது. இன்று பெரும் போராட்டமாக்கிவிட்டது. இதனால் சம்பந்தப்பட்ட சிலரை பார்மாலிட்டிக்காக கைது செய்துள்ளது காவல்துறை.
இந்த சம்பவத்தில் சங்கராச்சாரியார் அவிமுஸ்தேஸ்வரானந்த், ”கதா காலாட்சேபம் செய்ய பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு” எனப் பேசியுள்ளார்.
என்று தணியும் போதையின் தாகம்! என்று மடியும் பணத்தின் மோகம்!
”பகவான் கண்ணணே இடையராக பிறந்தவர் என்கின்றன புராணங்கள். எனில் அவன் புகழை பரப்ப எங்களுக்கே உரிமை இல்லையா? நாங்களும் இந்துக்கள் தானே” என்கிறார்கள் யாதவர்களுக்கான சாதி அமைப்புகள். ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் வேட்டுவ சமூகமான பழங்குடி சமூகத்தில் இருந்து வந்தவர். அந்த பழங்குடி சமூகத்து மக்கள் வால்மீகியின் ராமாயணத்தை குறித்து இன்று கதா காலட்சேபம் செய்வதை நினைத்து பார்க்க முடியாத நிலையில் இன்று வைக்கப்பட்டுள்ளனர்.
இந்து என்ற ஒரு மதமும், கடவுள் நம்பிக்கையும் ஒரு சமூகத்தின் மேலாண்மையை தொடர்ந்து நிலை நிறுத்துவதற்காகத் தான் என்ற போக்கு இதுகாலம் வரை சாத்தியமாகி இருக்கலாம். ஆனால், இனியும் அது சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை இந்த பிராமணர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
- சாவித்திரி கண்ணன்
தொடர்புடைய செய்திகள்
June 20, 2025, 7:25 am
வெற்றி என்பது ... வெள்ளிச் சிந்தனை
June 13, 2025, 8:03 am
பேசத் தயங்கும் வலிமிகுந்த இதயங்கள் - வெள்ளிச் சிந்தனை
June 7, 2025, 6:42 am
தியாகமே திருநாளாய்... - ஹஜ் சிந்தனை
June 6, 2025, 6:48 am
அந்தக் கல்லை பத்திரமாக திருப்பி அனுப்பிய மலேசியப் புனிதப் பயணி - வெள்ளிச் சிந்தனை
May 23, 2025, 8:06 am
ஹஜ் ஒரு மகத்தான பாக்கியம் - வெள்ளிச் சிந்தனை
May 5, 2025, 9:12 am
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை - ஜென்னி மார்க்ஸ்: இன்று கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்
May 2, 2025, 8:08 am
இறையுதவி கிடைக்குமா கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் தருணங்கள் - வெள்ளிச் சிந்தனை
May 1, 2025, 6:28 am
உழைப்பு என்பது... உழைப்பாளர் தின சிந்தனை
April 25, 2025, 8:26 am