நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை - ஜென்னி மார்க்ஸ்: இன்று கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்

எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஜென்னி மார்க்ஸ்

நூல் திறனாய்வு: முனைவர் க.சுபாஷிணி
நூல் பதிப்பு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

புதிதாக இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய நூல்களில் ஜென்னி மார்க்ஸின் ”எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை” என்ற நூலும் இணைந்து கொண்டது. பதிப்புரை தவிர்த்து இந்த நூல் மூன்று கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது.
முதல் கட்டுரை பர்மாவில் வாழ்ந்து தமிழ் இதழியல் மற்றும் பதிப்புத் துறையில் தடம்பதித்த தமிழறிஞர் சாமிநாத சர்மா அவர்களது கட்டுரை ஒன்று.
அடுத்ததாக இடம்பெறுவது ஜென்னி மார்க்ஸ் எழுதிய ஒரு கடிதம். இந்தக் கடிதமே ”எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை” என்ற தலைப்புடன் அமைந்திருக்கின்றது.

அடுத்ததாக நூலில் மூன்றாவதாக இடம்பெறுகின்ற கட்டுரை ஜென்னி மார்க்சின் சுயசரிதையிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள். இது ”நிகழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கை பற்றிய நடைச்சித்திரம்” என்ற தலைப்பில் வழங்கப்பட்டிருக்கின்றது.

முதலில் உள்ள கட்டுரை தவிர்த்து ஏனைய இரு கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகள். இந்த மொழிபெயர்ப்பு நடை புதிய வாசகர்களுக்கு நூலின் உட்பொருளைப் புரிந்து கொள்ள ஏதுவாக இல்லை. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு செய்கிறோம் என்ற நோக்கத்தோடு செய்த ஒரு முயற்சி போல தெரிகிறது. மிகக் கனமான, வலிகளும் துன்பங்களும், வரலாற்று நிகழ்வுகளும், போராட்டங்களும் கொண்ட வாழ்க்கைப் பாதையை விவரிக்கக் கூடிய சொற்கள் உணர்வுகள் கலந்து வெளிப்பட வேண்டும்.

ஆனால் இந்நூலின் மொழிபெயர்ப்பு அதனை முழுமையாகச் செய்யவில்லை என்று கூற வேண்டி இருக்கிறது. ஒரு ஆவணத்தைச் சொல்லுக்குச் சொல் தமிழ் மொழிக்கு மாற்றியது போன்ற உணர்வுடன் இந்த நூலின் இந்த இரண்டு முக்கிய பகுதிகளையும் வாசிக்க வேண்டியுள்ளது.

கார்ல் மார்க்ஸ் பற்றி அதிகம் பேசும் பொதுவெளியில் ஜென்னி மார்க்ஸ் அவ்வளவாக பேசப்படுவதில்லை தான். ஆனால் கார்ல் மார்க்ஸ் அவர்களது வாழ்க்கை ஜென்னி மார்க்ஸ் இல்லாமல் இல்லை என்பதை அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்தவர்கள் நிச்சயம் அறிந்திருப்போம்.

எந்தெந்த சூழ்நிலையில் ஜென்னி மார்க்ஸின் செயல்பாடுகள் கார்ல் மார்க்ஸைப் பாதுகாத்து வந்தன என்பதை இக்கால தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அதற்கு ஜென்னி மார்க்ஸின் கடிதங்களும், சுயசரிதையும் நிச்சயமாக வாசிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டியது அவசியம்.

ஜெர்மனியின் மேற்குப் பகுதி நகரான ட்ரியா நகரில் ஒரே பகுதியில் வாழ்ந்தார்கள் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஜென்னியின் பெற்றோர்கள். ஜென்னிக்கு கார்ல்மார்க்ஸை விட 4 வயது அதிகம். கார்ல் மார்க்ஸ் ஆரம்பத்தில் அவ்வளவு கவனத்துடன் தனது கல்வித் துறையில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் ஜென்னியின் காதல், அவரை கைப்பிடிக்க வேண்டும் என்றால் உறுதியான ஒரு வாழ்க்கை தேவை என்ற அழுத்தங்கள் ஆகியவற்றோடு பெர்லின் நகரில் உள்ள புகழ்மிக்க ஹும்போல்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கச் சேர்ந்தார்.

தத்துவத்துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் கல்வி கற்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்ச்சி பெற்று வந்தவர் பிறகு தத்துவத் தறையில் ஆய்வு ஒன்றை எழுதி அதன் வழி டாக்டர் பட்டமும் பெற்றார்.

இக் காலகட்டங்களில் ஜென்னி கார்ல் மார்க்ஸ் தனது கல்வி முடித்து வரும் வரையில் தனது வயதையும் பொருட்படுத்தாமல் காத்துக் கொண்டிருந்தார் என்பதை காணும் போது அவரது காதலின் ஆழம் நமக்குப் புரியும்.

ஒரு குடும்பப் பெண்மணியாக சிறிய வட்டத்திற்குள் வைக்கப்பட வேண்டியவர் அல்ல ஜென்னி. ஜெர்மனியில் இருந்து காரல் மார்க்ஸ் விரட்டப்படும் போது பாரிசுக்குச் செல்லத் தேவையான பொருளாதார ஏற்பாடுகளைச் செய்வதிலும் சரி, பிறகு அங்கிருந்து விரட்டப்படும் போது பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸல்சுக்கு அவர்கள் புறப்படும் போது அதற்குத் தேவையான பொருளாதார அடிப்படை தேவைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பும், அதுமட்டுமின்றி பிறகு மீண்டும் காவல்துறையினரால் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் போது லண்டனில் குடியேறச் செல்கின்ற அந்த முயற்சியின் போதும் ஜென்னியின் கடுமையான முயற்சிகள் தான் அவர்கள் குடும்பத்தை வழி நடத்திச் சென்றன.

காரல் மார்க்ஸ் வீட்டில் அமர்ந்து நூல்களை வாசித்துக் கொண்டும் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கும்போது தங்கள் உறவினர்களைச் சென்று சந்தித்து பொருளாதார உதவி கிடைக்குமா எனக் கேட்கச் செல்கின்ற போதும், தங்கள் வீட்டில் இருந்த விலையுயர்ந்த வெள்ளி பொருட்கள், வீட்டு பொருட்களை அடமானம் வைத்து சிறிய தொகையைச் சேகரித்து வந்து குடும்பத்தை நடத்துவதிலும் என ஜென்னி மார்க்ஸ் அக் குடும்பத்தின் தூணாகத் திகழ்ந்திருக்கின்றார்.

ஏழு குழந்தைகள் -அதில் நான்கு குழந்தைகள் இறந்து போவது என்பது ஒரு தாய்க்குச் சாதாரண விஷயம் அல்ல. பிறந்த உடனே ஓரிரு நாட்களில் வலுவில்லாமல் இறந்து போன குழந்தை; இளம் வயதிலேயே இறந்து போன மகன் எட்கர், இளம் வயதிலேயே இறந்து போன மகள்; இப்படி ஒவ்வொன்றாக குழந்தைகளை இழந்த தாய் ஜென்னி. இறந்து போன குழந்தைக்குச் சவப்பெட்டி செய்யக் கையில் காசு இல்லாமல் ஒரு தனி அறையில் குழந்தையை வைத்துவிட்டு மறு அறையில் ஒரு நாள் இரவைக் குடும்பத்தார் அனைவரும் கண்ணீரோடு கழித்த நிகழ்வுகளின் பதிவுகள் வாசிக்கும் போது கண்ணீரை வரவழைக்கின்றன.

கார்ல் மார்க்ஸுக்கும் ஜென்னிக்கும் 1843இல் திருமணம் நடக்கின்றது. அதற்குப் பின்னர் 1844 தொடங்கி நாடு விட்டு நாடு ஓடிக்கொண்டிருக்கும் மிகக் கடினமான காலகட்டம் இருவருக்கும்.

1849க்கு மேல் லண்டனுக்கு குடிபெயரும் இவர்களது வாழ்க்கை இருவரது இறுதி காலம் வரை பல போராட்டங்கள் நிறைந்ததாகவே அமைந்தது.

பல நாட்கள் ஒருவேளை உணவிற்கு இல்லாமல் தவித்த காலமும் நடந்தது; சில நாட்கள் நல்ல உணவும் உடுத்துவதற்கு நல்ல உடைகளும், கோடை காலத்தைக் கடற்கரை ஓரம் கழிக்கக்கூடிய இனிய வாய்ப்புகளும் அவர்களுக்கு அமைந்தது.

கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது நண்பர்களின் அத்தனை பொதுவுடமை சிந்தனை நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் ஜென்னி மார்க்ஸ். கார்ல் மார்க்ஸின் கையெழுத்துப் பிரதிகளை முழுமையாக எழுதித் தருவது, அச்சுக் கோர்த்து தருவது ஆகிய பணிகளை முழுமையாக ஜென்னி ஏற்றுக்கொண்டு அதனை தனது இறுதி காலம் வரை செய்து வந்தார்.

இக்காலகட்டங்களில் ஒரு முறை சிறையில் இருவரும் தனித்தனியாக தள்ளப்பட்டு சிறை அனுபவமும் இவர்கள் இருவருக்குமே அமைந்தது.

ஒருமுறை வீட்டிற்கு வாடகை கட்ட முடியாத சூழலில் லண்டன் நகரில் வீட்டிற்கு வெளியே தள்ளப்பட்டு, ஒரு நாள் இரவு முழுவதும் கடுங்குளிரில் வாடிய கொடுமையான அனுபவமும் ஜென்னிக்கு அமைந்தது.

எத்தனை துன்பங்கள் வந்த போதும் தனது கணவர் கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை நூல் வடிவில் கொண்டுவரும் பணியில் எந்தத் தாமதமும், தொய்வும், தடைகளும் வந்து விடக்கூடாது என்ற முழுமூச்சுடன் ஜென்னியின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.

இடையில் குழந்தைகள் இறந்து போன துயரச் சம்பவங்களும் வறுமையின் கோர முகமும் ஜென்னியின் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் தகர்த்துவிடவில்லை. 1881 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி ஜென்னி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு காலமானார். கார்ல் மார்க்ஸ் 1883 ஆம் ஆண்டு, அதாவது ஜென்னி இறந்த ஓராண்டு, சில மாதங்களுக்கு பின்னர் காலமானார்.

ஜென்னியின் உடல் முதலில் ஹைகேட் கல்லறைப் பகுதியில் புதைக்கப்பட்டு கல்லறை எழுப்பப்பட்டது. அதன் பின்னர் 1954 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு ஹைகேட்ஸ் பகுதியிலேயே நினைவுக்கல்லறை அமைக்கப்பட்டபோது ஜென்னியின் உடலும் சேர்ந்து எடுத்துக் கொண்டு வரப்பட்டு ஒரே இடத்தில் கார்லும் ஜென்னியும் புதைக்கப்பட்டார்கள்.

இன்று ஹைகேட் பகுதியில் உள்ள இக்கல்லறைப் பூங்காவில் உள்ள இந்த நினைவுச் சின்னத்தை வந்து பார்க்க தினம்தோறும் மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கின்றது.

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் அங்கம் ஜென்னி மார்க்ஸ். இவ்வுலகத்திற்குக் கார்ல் மார்க்ஸ் விட்டுச் சென்ற தத்துவக் கொள்கைகளும், பொருளாதார சிந்தனைகளும், தனி மனித உரிமை தொடர்பான கருத்துக்களும், தொழிலாளர் நலன் குறித்த கருத்துக்களிலும், பொதுவுடமை கருத்துக்களிலும் ஜென்னி மார்க்ஸின் பங்களிப்பும் இரண்டறக் கலந்தே இருக்கின்றது.

டாக்டர் சுபா, ஜெர்மனி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset