நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறையில் அடைக்கப்பட்ட சில தினங்களில் இளைஞர் மரணம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார்


கோலாலம்பூர்:

சிம்பாங் ரெங்கம் சிறையில் அடைக்கப்பட்ட சில தினங்களில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

21 வயதான சுரேந்திரன் சங்கர் குளுவாங் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். முன்னதாக அவர், சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

திடீர் அதிர்ச்சி (Septic Shock) மற்றும் பல்வேறு உடல் உறுப்புகளின் செயல்பாடு நின்றதால் மரணம் நிகழ்ந்திருப்பதாக மருத்துவமனை மருத்துவரை மேற்கோள் காட்டி சிம்பாங் ரெங்கம் சிறை அதிகாரி காவல் துறையில்  புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது.

கடும் இடுப்புவலி காரணமாக சுரேந்திரன் சங்கர் அவதிப்பட்டதாகவும் அதையடுத்து சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலையில் இருந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. போதைப்பொருள் தொடர்பான குற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார் சுரேந்திரன் சங்கர். அவரது தடுப்புக்காவல் 55 நாட்களுக்கு பொகா சட்டத்தின்கீழ் நீட்டிக்கப்பட்டது.

பின்னர் மூவார் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சுரேந்திரன், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அப்போதுதான் சுரேந்திரனை கடைசியாக பார்த்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26ஆம் தேதி மாலை 4.30மணி அளவில் தமது மகன்  மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறை அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டு விவரம் தெரிவித்ததாகவும் தமது மகன் கடும் வயிற்று வலியால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் சுரேந்திரனின் தாய் குமுதமேரி கூறுகிறார்.

பின்னர், தனது மகனின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது என்று குறிப்பிடும் குமுதமேரி, 21 வயதான தனது மகனுக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தனது மகனின் மரணத்தில் ஏதேனும் சூது இருக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset