நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

விக்ரம் - திரை விமர்சனம்

விக்ரம்

எங்கோ தூரத்திலிருந்து தன் மானசீக குருவின், ஆதர்ச நாயகனின் திரைப்படங்களைப் பார்த்து திரைமொழி கற்றுக்கொண்ட நவீன ஏகலைவனிடம், கமல்ஹாசன் என்னும் துரோணாச்சாரியார்

அவனது கட்டைவிரலை கேட்காமல், தனக்கென ஒரு திரைப்படத்தை எடுத்துக் கொடுக்கும்படி கேட்டால் என்ன நடக்குமோ?

அதைத்தான் நிகழ்த்தியிருக்கிறார்

லோகேஷ் கனகராஜ் என்னும் ஏகலைவன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்றைய மாஸ் ஹீரோக்களான விஜய்-அஜித் திரைப்படங்களுக்கு இணையாக, இரவு காட்சிகளில்கூட திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன. திரை அரங்கிற்குள் நுழைவதும், வாகனங்களை பார்க் செய்வதும் அத்தனை பெரிய சவாலான காரியமாக மாறியிருக்கிறது.

அப்படி என்ன மாயம் நிகழ்ந்திருக்கிறது விக்ரம் திரைப்படத்தில்?

திரைப்படம் முழுக்க கதாநாயகன் மட்டுமே ஆக்கிரமித்து இருக்கிறாரா?

இல்லை.

கதாநாயகன் கதாநாயகியுடன் இரண்டு குத்து பாடலும், வெளிநாட்டில் ஒரு டூயட் பாடலும் பாடி ஆடுகிறாரா?

இல்லை.

கதாநாயகனும் வில்லனும் அடிக்கடி சந்தித்து பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறார்களா???

இல்லை.

நான்கு நிமிடத்திற்கு ஒரு தரம் கேமராவைப் பார்த்து பஞ்ச் டயலாக் அடிக்கிறாரா?

இல்லை.

கதாநாயகி முதல் துணை கதாபாத்திரங்கள் வரை வெறுமனே வந்து போய் இருக்கிறார்களா?

இல்லை.

சமீபகால திரைப்படங்களில் இடம்பெற்றது போல் சாதியம் தொடர்பான காட்சிகள் உள்ளனவா?

இல்லை.

நெஞ்சைப் பிழியும் அண்ணன்-தங்கை, அம்மா சென்டிமென்ட் அதிகம் இருக்கிறதா?

இல்லை.

ஒரு வெகுஜன கமர்ஷியல் சினிமாவுக்கான, எந்த வரைமுறைகளும் இல்லாமல், எப்படி இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது?

கொஞ்சம் அலசுவோம்.

எத்தனை கோடிகள் செலவு செய்து திரைப்படங்களை எடுத்தாலும், கதாநாயகனின் பிம்பம் எத்தனை உயரத்தில் இருந்தாலும், ஒரு திரைப்படத்தின் அடிநாதமாக விளங்குவது அதன் திரைக்கதையும், அதை பார்வையாளர்களுக்கு கடத்தும் மிகச்சிறந்த நடிகர்களும் தான். இந்த இரண்டையும் நூற்றுக்கு நூறு நிறைவேற்றி இருக்கிறது விக்ரம்.

இப்படி ஒரு உலகம் சென்னை போன்ற நகரத்தில் இயங்கி வருகிறதா?

இதெல்லாம் எப்படி சாத்தியம்?

பார்ப்பவர்களை எல்லாம் சுட்டுக்கொண்டோ அல்லது கொலை செய்து கொண்டோ போக முடியுமா?? என்ற எந்த கேள்வியையும், திரைப்படம் பார்க்கும் நேரத்தில், பார்வையாளர்களிடம் எழுப்பாமல், ஒரு புதிய உலகத்திற்குள் அவர்களை இழுத்துச் சென்று, இது வேறொரு களம், வேறொரு உலகமென உணர்த்தியிருக்கிறார் லோகேஷ். அவருக்கு முதலில் பாராட்டுகள்.

அடுத்ததாக இதில் நடித்திருக்கும் நடிகர்கள்...

பகத் பாசில், விஜய் சேதுபதி, கமலஹாசன், சூர்யா ஆகியோர் சிறப்பான நடிப்பை வழங்குவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட, அத்தனை கவனமாக எழுதப்பட்டு, அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்த நான்கு ஜாம்பவான்களை மீறி, Agent Tina என்ற ஒரு பெண் கதாபாத்திரம், அத்தனை கைதட்டல்களும் விசில் சத்தங்களையும் திருடிச் செல்கிறது. பல திரைப்படங்களில் ஷோக்கேஸ் பொம்மையாக வந்து செல்லும் சந்தானபாரதி, கெளதம், காயத்ரி போன்ற நடிகர்கள் லோகேஷ் திரைப்படத்தில் தனியாக தெரிவது பாராட்டப்பட வேண்டியது.

கோடிக்கணக்கில் செலவு செய்து படம் பிடித்தாலும், ஆயிரம் வகையான துப்பாக்கிகளை காண்பித்தாலும் கதாபாத்திரங்களின் கண்கள் பேச வேண்டும். அந்தக் கண்களே பார்ப்பவர்களை கட்டிப்போடும். பகத் பாசிலின் கண்கள் அத்தனை நுணுக்கமாக திரைமொழி பேசுகின்றன.

விஜய் சேதுபதி தான் நடித்து இருக்கிறாரா?

அல்லது வேறு யாராவது நடித்து இருக்கிறார்களா என முதல்முறையாக விஜய் சேதுபதியை தாண்டி, நடை, உடை, குரல் , உச்சரிப்பு என அனைத்திலும் வேறு ஒருவராக மாறியிருக்கிறார் விஜயசேதுபதி. இது அவருக்கான வேறு பாதை.

கமல்ஹாசன்

தன் தயாரிப்பு நிறுவனத்தில் எடுக்கும் திரைப்படத்தில், தனக்கான காட்சிகள் குறைவாக இருந்தாலும், அதை தைரியமாக ஒத்துக்கொண்டு, தாடை தசைகள் முதல் 3 வினாடியில் விழியின் ஓரத்திலிருந்து வந்து விழும் கண்ணீர் துளி வரை வேறொரு பரிமாணத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கமல்ஹாசன்.

தனக்கென இசையில் வேறு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறார் அணிருத். அவருடைய பின்னணி இசை வெகுவாகப் பாராட்ட பட வேண்டியது.

இப்படிப்பட்ட திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன என்பது நிச்சயம் ரசிகர்களின் ரசனை மேம்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. அதேநேரம் லாக்டவுன் காலத்தில், OTT தளங்களில் பல மொழி திரைப்படங்களை பார்த்ததும், வெப்-சீரீஸ்களை பார்த்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கடைசியாக குணா தொடங்கி உத்தமவில்லன் வரை எத்தனையோ வித்தியாசமான முயற்சிகள் ஈடுபட்டு தோல்வியைக் கண்ட உலக நாயகனுக்கு, மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றி மிகுந்த தேவையாயிருக்கிறது. அவரை விட அவரது ரசிகர்களுக்கு மிகுந்த தேவையாய் இருந்திருக்கிறது.

Once a Ghost is always a Ghost, என்பதை இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு

எடுத்துக் காட்டியிருக்கிறது விக்ரம்.

விமர்சனம்: பிரபுசங்கர்_க

தொடர்புடைய செய்திகள்

+ - reset