நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சாணிக் காயிதம்: விமர்சகர் பார்வை - மானசீகன்

தொழில் நுட்பம் மட்டுமே சிறந்த திரை அனுபவத்தைத் தர முடியும் என்றால் 'சாணிக் காயிதம்' சந்தேகமே இல்லாமல் மிகச் சிறந்த திரைப்படம்.

இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங்  , நடிப்பு அத்தனையும் தரம்..சில காட்சிகள்  இன்னும் பல நாட்களுக்கு நினைவில் இருக்கும்.

ஆனால், படத்தை ரசிக்க முடியவில்லை. வன்முறை கூடக் காரணம் இல்லை. சமீப காலங்களில் இதை விட மோசமான வன்முறை கொண்ட படங்கள் வெகுஜனப்படங்களாகவே கொண்டாடப்படுகின்றன..

படத்தில் எனக்குப் பிடித்த ஒரே பாத்திரம் ' சுடலைதான் '. அந்த இறுதிக் காட்சியும்.

மகாபாரத ஒப்பீடு சரிதான். ஆனால், மகாபாரதத்தின் இறுதியில் உருவாகும் கவித்துவமான வெறுமையை இந்தப் படத்தால் உருவாக்க முடியவில்லை.

மகாபாரதம் வியாசரின் கோணத்தில் எழுதப்பட்டதால்தான் அது மகத்தான பேரனுபவத்தைத் தருகிறது. பாஞ்சாலியின் பார்வையில் எழுதப்பட்டிருந்தால் சாதாரண பழிவாங்கல் கதையாகச் சுருங்கிப் போயிருக்கும்.

இந்தப் படத்தை இயக்குநர்  அருண் மாதேஸ்வரன்  சங்கையா, பொன்னியின் கோணத்திலேயே காட்ட விரும்பியிருக்கிறார். அதனால்தான் செவ்வகச் சட்டகம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்கிறது.

அவர்களின் கோணத்தில் காட்டினால் மட்டுமே பழிவாங்கலின்  உடல் ரீதியான கிளர்ச்சியை பார்வையாளர்களுக்குக் கடந்த முடியும். இயக்குநர் விரும்புவது அதை மட்டுமே..

மகாபாரதத்திலேயே சஞ்சயன் பார்வையற்ற திருதராட்டினுக்கு போர்க்காட்சிகளைச் சொல்கிறான். கண் தெரியாத சுடலையின் கோணத்தில் படம் நகர்ந்திருந்தாலும்கூட கண்டிப்பாக வேறொரு சிறந்த அனுபவத்தைத் தந்திருக்கும்..

பார்வையற்றவனுக்குச் சட்டகங்கள் கிடையாது. ஆனால், இயக்குநர் விரும்புவதே நாமும் அந்த சட்டகத்தில் சிக்கிக் கொள்வதைத்தான். சுடலைக்கு நீதியுணர்வு மட்டுமே உண்டு. தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறதென்றே தெரியாது. இவர்கள் செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்று நிர்க்கதியான நிலையில்  அவர்களைப் பற்றிக் கொள்கிறான்.

படம் முடியும் வரை நம்மையும் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதே அருணின் ஆழ்மன விருப்பம். இவர்கள் ‌இருவரும் 'பழிவாங்கல் ' எனும்  சட்டகத்தின் வழியாக உலகைப் பார்க்கின்றனர். அவனுக்கே தெரியாமல் அவன் உலகமாக அதுவே மாறி விடுகிறது; நமக்கும்.

ஆயிரம் பார்வைகளை உணர்வதற்கு முதலில் வெட்டவெளியில் நிற்க வேண்டும்..அதுவரையில்  கிடைப்பவை எல்லாம் புதிய கேமராவின் பழைய பார்வை மட்டுமே.

அவரவர் விருப்பம்

விமர்சனம்: மானசீகன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset