நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏவில் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 600 கிலோ போதைப் பொருட்களை போலிஸ் பறிமுதல் செய்தது

ஷாஆலம்:

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் வழியாக போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய பல சோதனைகளில், 37.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கொக்கைன் உட்பட சுமார் 600.3 கிலோ பல்வேறு வகையான போதைப்பொருட்களை போலிஸ் பறிமுதல் செய்தது.

ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி கடந்த திங்கட்கிழமை முடிவடைந்த இந்த சோதனைகளில், போதைப்பொருள் கடத்துபவர்களாக நம்பப்படும் வெளிநாட்டினர் உட்பட, 22 முதல் 54 வயதுக்குட்பட்ட 12 சந்தேக நபர்களைத் தனது குழுவினர் கைது செய்ததாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் ஷசாலி கஹார் கூறினார்.

அம்பாங்கைச் சுற்றி ஷாபு, ஹெராயின் கடத்தல் கும்பல் ஒன்றும் இந்த சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது என செய்திகள் வெளியாகின.

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகள் வழியாக கவர்ச்சிகரமான வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குப் பொருட்களை எடுத்துச் செல்லுமாறு அவர்கள் ஏமாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.

அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மலேசியாவிற்கு வருமாறு அவர்களுக்கு அழைப்புகள் வந்தன.

சமூக ஊடகங்கள் வழியாக அளிக்கப்பட்ட வேலை வாய்ப்புகளே ஆரம்பகட்ட ஆசை வார்த்தைகளாக இருந்தன.

மேலும், தாங்கள் எடுத்துச் சென்ற பொருட்களில் போதைப்பொருள் இருந்தது தங்களுக்குத் தெரியாது என்று அவர்களில் சிலர் கூறினர் என்றார் அவர்.

உள்ளூர் சந்தைக்காக 7.7 கிலோ கொக்கைனைக் கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் கேஎல்ஐஏவில் கைது செய்யப்பட்ட ஒரு வெளிநாட்டு நபரே, அம்பாங்கில் போதைப்பொருள் கடத்தல் வேட்டையை முறியடிக்க வழிவகுத்தார்.

மொத்தத்தில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 96.1 கிலோ கஞ்சா பூக்கள், ஷாபு (408.6 கிலோ), ஹெராயின் பேஸ் (87.9 கிலோ) மற்றும் கொக்கைன் (7.7 கிலோ) ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset