நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அண்டை நாடுகளில் திறந்தவெளி எரிப்பு கட்டுப்படுத்தப்படும் வரை புகைமூட்டம் நீடிக்கும்: மெட்மலேசியா அறிவிப்பு

கோலாலம்பூர்: 

அண்டை நாடுகளில் திறந்தவெளி எரிப்பு கட்டுப்படுத்தப்படும் வரை, நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் புகைமூட்டம் விலகாது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படும் தற்போதைய வெப்பமான, வறண்ட காலநிலை, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என்று மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முஹம்மது  ஹிஷாம் முஹம்மது அனிப் கூறினார்.

கலிமந்தான், சுமாத்ராவிலிருந்து வீசும் காற்றின் போக்கு, எல்லை தாண்டிய புகைமூட்டத்தை நேரடியாக சரவாக், மலேசியத் தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரைக்குக் கொண்டு செல்கிறது என்றும் அவர் கூறினார்.

எரிந்து கொண்டிருக்கும் பகுதிகள் கட்டுக்குள் கொண்டுவரப்படாத வரை, வரும் நாட்களில் புகைமூட்டமான வானிலை நீடிக்கும்.

"அடுத்த சில நாட்களுக்கு, நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வானிலை வறண்டதாகவும் வெப்பமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

இன்று காலை 10 மணி நிலவரப்படி, சிலாங்கூர், கெடா மற்றும் பினாங்கு உட்பட நான்கு மாநிலங்களில் உள்ள 10 பகுதிகளில், ஆரோக்கியமற்ற காற்று மாசுபடுத்தும் குறியீட்டு (API) அளவுகள் பதிவாகியுள்ளன.

சரவாக்கில் உள்ள செரியான், 194 என்ற மிக உயர்ந்த API அளவைப் பதிவுசெய்து, "மிகவும் ஆரோக்கியமற்ற" (201 முதல் 300 வரை) பிரிவின் விளிம்பில் உள்ளது.

API அளவு 0 முதல் 50 வரை நல்லது என்றும், 51 முதல் 100 வரை மிதமானது என்றும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றது என்றும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றது என்றும், 300 மற்றும் அதற்கு மேல் அபாயகரமானது என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset