நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் மீது பிரதமர் அன்வார் வழக்கு தொடர்ந்துள்ளார்

கோலாலம்பூர்:

கடந்த ஜூன் மாதம் பஹாங்கில் அவதூறாக பேசியதாக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் மீது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜூன் 14 அன்று, குவாலா க்ராவின் ஃபெல்டா ஜெண்டராக் உத்தாராவில், பொதுமக்கள் முன்பும் ஊடகப் பிரதிநிதிகள் முன்னிலையிலும் நிகழ்த்திய அரசியல் உரையின் போது, தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களைக் கூறியதாக அன்வார் குற்றம் சாட்டி உள்ளார்.

அந்தப் பேச்சின் காணொலிக் காட்சி, அடுத்த நாள் (ஜூன் 15) ‘@Malaysianometry’ என்ற யூடியூப் கணக்கில் “Tuan Ibrahim: ‘Pengulas bola direhatkan lepas sertai PAS, ini tanda-tanda PH nak mampus’” என்ற தலைப்பில் அந்த அவதூறான உரை பதிவேற்றப்பட்டது, வெளியிடப்பட்டது  என்று அன்வார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த 11 நிமிட காணொலிக் காட்சி 20,000-க்கும் மேற்பட்ட பார்வைகளையும், 482 விருப்பங்களையும் (likes), 65 கருத்துகளையும் (comments) பெற்றிருந்ததுடன், பொதுமக்களால் அணுகக்கூடியதாகவும், பார்க்கக்கூடியதாகவும் பகிரக்கூடியதாகவும் இருந்தது.

ஜூன் 15 அன்று காலை 8.08 மணிக்கு, துவான் இப்ராஹிம், அந்த  அவதூறானதாகக் கூறப்படும் கருத்துக்களைக் கொண்ட ஒரு காணொலிக் காட்சியைத் தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கான @Tuan Ibrahim Tuan Man-இல் வெளியிட்டார் என்றும், அதே நேரத்தில் ஜூன் 24 அன்று, அந்தக் காணொலி ‘PAS Pahang’ முகநூல் கணக்கிலும் பதிவேற்றப்பட்டது என்றும் அன்வார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அவதூறான வார்த்தைகள் குறிப்பாகவும் நேரடியாகவும் தன்னையோ, தனது குணநலன், நேர்மை, பதவி, தொழில் அல்லது பிரதமர் என்ற அந்தஸ்து ஆகியவற்றையோ குறிப்பிடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

அந்த அவதூறான வார்த்தைகள் உண்மையற்றவை, பொய்யானவை, ஆதாரமற்றவை, வரம்பு மீறியவை, தீய நோக்கம் கொண்டவை என்றும், அவை எந்தவொரு நியாயமான உண்மைகளோ அல்லது ஆதாரங்களோ இன்றி உரை நிகழ்த்தப்பட்டதாக அல்லது வெளியிடப்பட்டதாகவோ வாதி கூறினார்.

"ஒரு தனிநபர், வாதியையோ, அரசாங்கத்தையோ அல்லது அதன் நிர்வாகத்தின் எந்தவொரு உறுப்பினரையோ விமர்சித்த ஒரே காரணத்திற்காக, அவருக்கு எதிராக விசாரணை நடத்தவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ மலேசிய அரச காவல்துறைக்கு வாதி ஒருபோதும் உத்தரவிடவோ, காரணமாக இருக்கவோ, செல்வாக்கு செலுத்தவோ அல்லது தூண்டவோ இல்லை," என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மாநிலத்தில் இந்த விவகாரம் தொடர்பான அரசியலமைப்பு அல்லது வழக்காற்று நடைமுறையில், நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்துவான் பெசாரைத் தீர்மானிப்பதிலோ, தேர்ந்தெடுப்பதிலோ, வாக்களிப்பதிலோ அல்லது நியமிப்பதிலோ, தான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒருபோதும் தலையிடவில்லை என்று அன்வார் கூறினார்.

பிரதிவாதியின் செயல்களின் விளைவாக, தனிப்பட்ட முறையிலும், பிரதமர், நிதி அமைச்சர், PKR தலைவர், பக்காத்தான் ஹரப்பான் தலைவர், தம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய தனது பதவிகளிலும் தனது நற்பெயர், குணம், கண்ணியம், நேர்மை, நம்பகத்தன்மை, நன்மதிப்பு, அந்தஸ்து ஆகியவற்றிற்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக வாதி கூறினார்.

எனவே, பிரதிவாதியோ அல்லது அவரது பிரதிநிதிகளோ அந்த அவதூறான வார்த்தைகளை மேலும் வெளியிடுவதையோ அல்லது மறுவெளியிடுவதையோ தடுப்பதற்காக அன்வார் ஒரு தடை உத்தரவைக் கோரினார்.

மேலும், பிரதிவாதி தனது உடைமை, பொறுப்பு அல்லது கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு சமூக ஊடகக் கணக்குகள், தளங்கள் அல்லது வெளியீடுகளில் இருந்தும் அந்த அவதூறான பதிவுகளை நீக்குமாறு உத்தரவிடவும் பிரதமர் கோரினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset