நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெரியவர்களை விட மூன்று மடங்கு வேகத்தில் AI-ஐ பயன்படுத்தும் குழந்தைகள்: யுனிசெஃப்

ஹாமில்டன்: 

உலகம் முழுவதும் குழந்தைகள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வேகம், பெரியவர்களைவிட மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் (UNICEF) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

10 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குறைந்தது 2 கோடி குழந்தைகள் AI-ஐ ஏற்கனவே பயன்படுத்தியுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர், அதாவது ஒவ்வொரு 10 குழந்தைகளில் ஒருவராவது, தங்களது தனிப்பட்ட கவலைகள், மனஅழுத்தங்களுக்கு AI-யிடம் ஆலோசனை பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், சுமார் 1.3 கோடி குழந்தைகள் பாடங்களைப் புரிந்துகொள்ளவும், பள்ளி வீட்டுப்பாடங்களை முடிக்கவும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"AI இன்று மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. அது அன்றாட வாழ்வை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியையும் எதிர்காலத்தையும் வடிவமைத்து வருகிறது. அதன் தாக்கம் நன்மையாகவும் இருக்கலாம்; தீமையாகவும் மாறலாம்," என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

AI அமைப்புகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன, அவற்றின் வணிக நோக்கங்கள் என்ன, குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருந்தாலும், அந்த அமைப்புகளை எதிர்க்கவோ அல்லது தவிர்க்கவோ அவர்களிடம் போதிய அதிகாரம் இல்லை என்றும் யுனிசெஃப் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், AI நிர்வாகத்தில் ஏற்படும் குறைபாடுகளின் தாக்கத்தை முதலில் எதிர்கொள்வதும், அதன் நீண்டகால விளைவுகளை அதிகம் சுமப்பதும் குழந்தைகளே என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆய்வில் பங்கேற்ற 10 நாடுகளின் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர், AI தொழில்நுட்பம் மோசடி, ஏமாற்று வேலைகள், போலித் தகவல்களைப் பரப்புவதற்காக தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அதேவேளை, நான்கில் ஒரு பங்கினர், தங்களது புகைப்படங்கள் அல்லது காணொலிகள் 'டீப்ஃபேக்' (Deepfake) தொழில்நுட்பம் மூலம் ஆபாச உள்ளடக்கங்களாக மாற்றப்படும் அபாயம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.

போதுமான பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாத நிலையில், குழந்தைகள் அதிகளவில் AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருவது கவலைக்குரிய சூழ்நிலையாக உள்ளதாகவும், பாதுகாப்பு அம்சங்கள் பின்னர் சிந்திக்கப்படும் விஷயமாக மாறிவிட்டதாகவும் யுனிசெஃப் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து, குழந்தைகளின் உரிமைகளை உலகளாவிய AI நிர்வாகத்தின் மையமாகக் கொண்டு செயல்படுமாறு அரசுகள், தனியார் நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகளுக்கு யுனிசெஃப் கோரிக்கை வைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்த ஆராய்ச்சியில் முதலீடு செய்தல், AI வழி நடைபெறும் பாலியல் சுரண்டலைத் தடுக்கும் சட்டங்களை வலுப்படுத்துதல், பாதுகாப்பான, வெளிப்படையான AI தொழில்நுட்ப வளர்ச்சியை உறுதி செய்தல், AI அறிவாற்றலை மேம்படுத்துதல், டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகள் அவசியம் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

"இது மிக முக்கியமான திருப்புமுனை. இன்று AI குறித்து எடுக்கப்படும் முடிவுகளே, வரும் பல தசாப்தங்களுக்குக் குழந்தைகளின் பாதுகாப்பு, தனியுரிமை, நல்வாழ்வு, சம வாய்ப்புகளைத் தீர்மானிக்கும்," என்று யுனிசெஃப் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset