நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மியான்மர் ஆட்சிக்கு மலேசியா அங்கீகாரம் வழங்கவில்லை: நாடாளுமன்றத்தில் டோக் மாட் திட்டவட்டம்

கோலாலம்பூர்:

மியான்மரின் தற்போதைய நிர்வாகத்தை மலேசியா இதுவரை அங்கீகரிக்கவில்லை என்றும், அந்நாட்டு அதிகாரிகளுடனான சமீபத்திய சந்திப்புகள் இராஜதந்திர அங்கீகாரமாக கருதப்படக்கூடாது என்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன் (டோக் மாட்) தெளிவுபடுத்தியுள்ளார்.

டேவான் ராக்யத்தில் பேசிய அவர், கடந்த மே மாதம் மியான்மருக்கு மேற்கொண்ட பயணம், ஆசியானின் ஐந்து அம்ச ஒருமித்த உடன்படிக்கை (5PC) அடிப்படையில் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கும், தொடர்பு வழிகளைத் தொடர்வதற்குமான முயற்சியே தவிர, மியான்மர் நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதல்ல என வலியுறுத்தினார்.

“நாங்கள் அந்த நிர்வாகத்தை அங்கீகரிக்கவில்லை. எனவே மலேசியாவின் பார்வையில் அதை ‘அரசாங்கம்’ எனக் குறிப்பிட முடியாது,” என்று அவர் உறுதியாகக் கூறினார்.

மேலும், மியான்மரின் நீடித்துவரும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், அரசியல் நிலைத்தன்மை, தேசிய நல்லிணக்கம், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகள், 5PC அமலாக்க முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினை, அரசியல் கைதிகளின் நிலைமை, இணையவழி நிதிக் குற்றங்களைத் தடுக்கும் ஒத்துழைப்பு போன்ற முக்கிய விவகாரங்களும் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றதாக அவர் கூறினார்.

மியான்மர் அரசியல் தீர்வுக்கான நீண்டகால அணுகுமுறையாக, அதிக தன்னாட்சி, கூட்டாட்சி அம்சங்களைப் பரிசீலிக்குமாறு மலேசியா பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

அதேவேளை, மியான்மரை முழுமையாக தனிமைப்படுத்துவது ஆசியானுக்குச் சாத்தியமற்றது என்றும், அவ்வாறு செய்வது வெளிநாட்டு வல்லரசுகள் தலையீடு செய்யக்கூடிய அரசியல் வெற்றிடத்தை உருவாக்கும் அபாயம் உள்ளதாகவும் டோக் மாட் எச்சரித்தார்.

மியான்மர் விவகாரத்தில் தனது கொள்கை நிலைப்பாட்டை மாற்றாமல், அமைதிக்கும் பிராந்திய நிலைத்தன்மைக்கும் முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையையே மலேசியா தொடர்கிறது என்பது இந்த அறிவிப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset