நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் 287 சிறுவியாபார மையங்கள் நவீனமயமாக்கப்படுகின்றன

கோலாலம்பூர்: 

தலைநகர் முழுவதும் உள்ள 287 சிறுவியாபார மையங்களை மேம்படுத்துவதற்காக கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) 200 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. Lestari Niaga @ Kuala Lumpur 2026 திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, 11,000-க்கும் மேற்பட்ட சிறுவியாபாரிகளுக்கு நேரடி பலனை அளிக்கவுள்ளது.

பிரதமர் துறையின் (கூட்டாட்சிப் பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா இயோ, இத்திட்டம் சிறுவியாபாரிகள், பொதுமக்கள், வணிகத் துறையினருக்கு சுத்தமான, பாதுகாப்பான, ஒழுங்கமைக்கப்பட்ட வணிகச் சூழலை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டதாக தெரிவித்தார்.

செந்தூல் UTC முன்பகுதியில் இடம்பெற்ற இடிப்பு பணிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவிய காணொலிக்குப் பதிலளித்த அவர், அந்த நடவடிக்கை வியாபாரிகளை அகற்றுவதற்காக அல்ல; மாறாக, அவர்களுக்குச் சிறந்த வசதிகளை வழங்கும் மறுசீரமைப்பு திட்டத்தின் ஓர் அங்கம் என விளக்கமளித்தார்.

இதனிடையே, கோலாலம்பூர் மாநகர மேயர் டத்தோ ஶ்ரீ ஃபத்லுன் மாக் உஜூத், சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வரும் செந்தூல் வியாபார மையம் 1.6 மில்லியன் ரிங்கிட் செலவில் முழுமையாகப் புதுப்பிக்கப்படுவதாகக் கூறினார்.

இந்தத் திட்டத்தின் கீழ், குடிநீர், மின்சார வசதிகளுடன் கூடிய புதிய கடைகள், மூடப்பட்ட உணவகப் பகுதி, மேம்பட்ட விளக்குகள், கைக்கழுவும் வசதிகள், கழிவுநீர், வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட நவீன வசதிகள் உருவாக்கப்படவுள்ளன.

ஜூன் 15-ஆம் தேதி தொடங்கியுள்ள இந்தப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் நிறைவடைந்து, அக்டோபர் மாதத்தில் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகளால் பாதிக்கப்படும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தகுதியான ஒவ்வொரு வியாபாரிக்கும் மாதம் 1,500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்க DBKL முடிவு செய்துள்ளது.

நகர்ப்புற வளர்ச்சியும் சிறுவியாபாரிகளின் நலனும் சமநிலையுடன் முன்னேற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என DBKL வலியுறுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset