செய்திகள் மலேசியா
கல்வித் தடைகளைத் தகர்க்கும் டிஜிட்டல் புரட்சி: பெராந்தி மகாசிஸ்வா திட்டத்தின் கீழ் ஜொகூரில் 258 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை மித்ரா வழங்கியது
ஜொகூர்பாரு:
பி40 இந்திய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், மித்ரா தனது 'பெராந்தி மகாசிஸ்வா' திட்டத்தின் கீழ் ஜொகூர் மாநிலத்தில் இன்று 258 புதிய மடிக்கணினிகளை வழங்கியது.
ஜொகூர், ஸ்கூடாயில் உள்ள மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அப்பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட துன் உசேன் ஒன் மலேசியா பல்கலைக்கழகம், கோலாலம்பூர் பல்கலைக்கழகம், சிட்டி பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைந்தனர்.
இலக்கவிகல் வசதிகள் இன்றித் தவிக்கும் மாணவர்கள் தங்களின் உயர்கல்வியைத் தடையின்றித் தொடரவும், தொழில்நுட்ப உலகில் திறம்படப் போட்டியிடவும் இந்த உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மித்ராவின் தலைமை இயக்குனர் ரவீந்திரன் நாயர்,
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் வழிகாட்டலில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
ஜொகூர் மாநிலத்திலான இந்த விநியோகம் திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ளது.
பிற மாநிலங்களிலும் இத்திட்டம் மிக வெளிப்படையான மற்றும் சீரான முறையில் தொடரும்.
தகுதியான மாணவர்களுக்கு அரசின் உதவிகள் முறையாகச் சென்றடைவதை மித்ரா உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் மேற்பார்வையில் மித்ரா முன்னெடுத்துள்ள இந்தத் திட்டத்தின் கீழ், நாடு தழுவிய அளவில் தகுதியுடைய 3,000 இந்திய உயர்கல்வி மாணவர்கள் பயனடைவர்.
மித்ரா, மனிதவள அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட பிறகு, நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, பயனாளிகளின் பட்டியல், நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களின் நிலை குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடும் நடவடிக்கை, மித்ராவின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இந்தத் திட்டம் கடந்த மே 10ஆம் தேதி மலாயாப் பல்கலைக்கழகத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
அன்றைய நிகழ்வில், மித்ராவின் செயல்பாடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டிய பிரதமர், இந்திய சமூக மேம்பாட்டிற்கான நிதியை 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார்.
மலேசியாவின் 'மடானி’ கொள்கையானது, இனம், மதங்களைக் கடந்து விளிம்பு நிலையில் உள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சமத்துவ வளர்ச்சியை வலியுறுத்துகிறது.
இந்த அடிப்படையில், இந்திய சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதில் மித்ரா முக்கியப் பங்காற்றி வருகிறது.
அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் வழிகாட்டலில், இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொருளாதாரச் சுமையின்றி உயர்கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதே மித்ராவின் முதன்மை இலக்காகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 6:00 pm
நீதித்துறையின் உயிர்நாடி மக்களின் நம்பிக்கை: தலைமை நீதிபதியின் ஆழமான எச்சரிக்கை
June 19, 2026, 5:28 pm
UNHCR அட்டை இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்: குடிவரவுத் துறை எச்சரிக்கை
June 19, 2026, 4:40 pm
போதை வலையில் சிக்கிய ஆசிரியர்: கஞ்சா விநியோகச் சந்தேகத்தில் நால்வர் கைது
June 19, 2026, 3:43 pm
குடும்ப நம்பிக்கையைச் சீரழித்த கொடூரம்: முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைவாசம்
June 19, 2026, 3:25 pm
