செய்திகள் மலேசியா
நீதித்துறையின் உயிர்நாடி மக்களின் நம்பிக்கை: தலைமை நீதிபதியின் ஆழமான எச்சரிக்கை
கோலாலம்பூர்:
நீதித்துறையின் மிகப் பெரும் பலமும், மதிப்புமிக்க சொத்தும் மக்கள் நம்பிக்கையே என்றும், அந்த நம்பிக்கையை நேர்மை, பொறுப்புணர்வு, தொடர்ச்சியான நீதிசார் நடைமுறைகள் மூலமே நிலைநிறுத்த முடியும் என்றும் தலைமை நீதிபதி துன் வான் அஹ்மத் ஃபரீத் வான் சாலே வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் தலைமை நீதிபதி துன் ஜக்கி அஸ்மியின் சேவையை நினைவுகூர்ந்த அவர், ஓர் உண்மையான தலைவர் கடினமான முடிவுகளை எடுக்கத் தயங்கக் கூடாது என்றும், எதிர்கால தலைமுறைகளுக்காக மேலும் வலுவான, நம்பகத்தன்மை மிக்க நிறுவனத்தை உருவாக்கி விட்டுச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
“மக்கள் நம்பிக்கை என்பது தானாகக் கிடைக்கும் பரிசல்ல; அது ஒவ்வொரு நீதித் தீர்ப்பிலும் வெளிப்படும் நேர்மையாலும், நீண்டகால அர்ப்பணிப்பாலும் படிப்படியாக கட்டியெழுப்பப்படும் அரிய சொத்து,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், தலைமைத்துவம் என்பது பதவி, புகழ் அல்லது தனிப்பட்ட முன்னேற்றம் அல்ல; மாறாக, ஒரு நிறுவனத்தின் கண்ணியத்தையும் நம்பகத்தன்மையையும் பாதுகாக்கும் பொறுப்பாகும் என்றார்.
ஒரு தலைவருக்கு பல்வேறு அழுத்தங்களும் சவால்களும் வரலாம். இருப்பினும், தனிப்பட்ட நலன்களை விட நிறுவனத்தின் நீண்டகால நலன்களையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் முன்னிலைப்படுத்தியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“தலைமைத்துவம் பல நேரங்களில் பிரபலமற்ற முடிவுகளை எடுக்கத் தூண்டும். ஆனால் கொள்கைகளையும் நீதியையும் காக்கும் துணிச்சலே ஒரு தலைவரின் உண்மையான அடையாளம்,” என்று அவர் தெரிவித்தார்.
‘துணிச்சலுடன் வழிநடத்துதல்; நீதியைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற துன் ஜாக்கி அஸ்மி சொற்பொழிவு தொடரில் உரையாற்றிய அவர், ஓய்வு பெறும் தலைவர்களின் அனுபவங்களும் அறிவும் அடுத்த தலைமுறைக்கு முறையாகக் கடத்தப்பட வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
நெருக்கடி மேலாண்மை, சிக்கலான முடிவெடுப்பு மற்றும் நிறுவன வழிநடத்தல் தொடர்பான அனுபவங்கள் மறைந்து போகாமல், எதிர்கால தலைவர்களுக்கு வழிகாட்டியாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“தலைமை என்பது தனிநபர் வளர்ச்சிக்கான ஏணி அல்ல; சமூக நலனுக்காக நிறுவனங்களை வலுப்படுத்தும் உயரிய பொறுப்பு,” என தலைமை நீதிபதி தனது உரையில் ஆழமான செய்தியைப் பகிர்ந்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 5:28 pm
UNHCR அட்டை இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்: குடிவரவுத் துறை எச்சரிக்கை
June 19, 2026, 4:40 pm
போதை வலையில் சிக்கிய ஆசிரியர்: கஞ்சா விநியோகச் சந்தேகத்தில் நால்வர் கைது
June 19, 2026, 3:43 pm
குடும்ப நம்பிக்கையைச் சீரழித்த கொடூரம்: முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைவாசம்
June 19, 2026, 3:25 pm
