செய்திகள் மலேசியா
பேராக்கில் 125 பன்றிப் பண்ணைகளில் 82 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன; 28 பண்ணைகள் முழுமையாக நவீனமயமாக்கப்பட்டன: டத்தோ சிவநேசன்
ஆயர் கூனிங்:
பேரா மாநிலத்தில் பன்றிப் பண்ணைகளை நவீன முறைக்கு மாற்றும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பேரா மாநில மனிதவள, சுகாதாரம், இந்திய சமூகம், ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இதனை தெரிவித்தார்.
இன்று பேரா ஆயர் கூனிங்கில் உள்ள மேக்ஸ் மில் பண்ணையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், பன்றிப் பண்ணைகள் சுத்தமான முறையிலும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படியும் இயங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டதாக அவர் கூறினார்.
2018ஆம் ஆண்டு மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு, பேரா மாநில பன்றிப் பண்ணைகளை நவீனமயமாக்கும் பணிகளை மீண்டும் தீவிரப்படுத்தியதாகவும், பண்ணை உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் பாராட்டினார்.
2020ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம், கோவிட்19 தொற்றுநோய் காரணமாக திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், 2022 நவம்பரில் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அவரின் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பேரா மாநிலத்தில் 125 பன்றிப் பண்ணைகள் இருந்தன.
இது மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான பன்றிப் பண்ணைகளைக் கொண்ட மாநிலமாக பேராவை உருவாக்கியது.
தற்போது அந்த எண்ணிக்கை 82 ஆகக் குறைந்துள்ளதாகவும், எந்தப் பண்ணையையும் மாநில அரசு கட்டாயப்படுத்தி மூடவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
நோய்த் தாக்கம், நிதி சிக்கல்கள் மற்றும் நவீன பண்ணை முறைக்கு மாற இயலாமை போன்ற காரணங்களால் சில பண்ணைகள் தாமாகவே செயல்பாட்டை நிறுத்தியதாக அவர் கூறினார்.
நவீன பன்றிப் பண்ணை அமைப்புக்கான முதலீட்டு செலவு குறைந்தபட்சம் 18 லட்சம் ரிங்கிட்டிலிருந்து அதிகபட்சம் 10 கோடி ரிங்கிட் வரை செலவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது 82 பண்ணைகளில் 28 பண்ணைகள் 100 விழுக்காடு நவீனமயமாக்கப்பட்டுள்ளன. மேலும் 6 பண்ணைகள் 90 விழுக்காடும், 8 பண்ணைகள் 80 விழுக்காடும், 2 பண்ணைகள் 70 விழுக்காடும் பணிகளை நிறைவு செய்துள்ளன.
இன்னும் 13 பண்ணைகள் பணிகளைத் தொடங்காத நிலையில் உள்ளன.
அவற்றில் சில பண்ணைகள் திட்ட அனுமதிக்காக விண்ணப்பித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட மாவட்ட நில அலுவலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றின் விண்ணப்பங்களை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 6:00 pm
நீதித்துறையின் உயிர்நாடி மக்களின் நம்பிக்கை: தலைமை நீதிபதியின் ஆழமான எச்சரிக்கை
June 19, 2026, 5:28 pm
UNHCR அட்டை இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்: குடிவரவுத் துறை எச்சரிக்கை
June 19, 2026, 4:40 pm
போதை வலையில் சிக்கிய ஆசிரியர்: கஞ்சா விநியோகச் சந்தேகத்தில் நால்வர் கைது
June 19, 2026, 3:43 pm
குடும்ப நம்பிக்கையைச் சீரழித்த கொடூரம்: முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறைவாசம்
June 19, 2026, 3:25 pm
