நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கால்நடைத் துறையில் புதிய அத்தியாயம்: GAVIS 2026-இல் 1,200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பு

புத்ராஜெயா: 

நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கால்நடைத் தொழில்துறையின் நிலையான வளர்ச்சியையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், உலக கால்நடை, தொழில்துறை உச்சிமாநாடு (GAVIS 2026) முதன்முறையாக பிரம்மாண்ட அளவில் நடத்தப்படவுள்ளது.

கால்நடை சேவைகள் துறையின் (DVS) தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹம்மத் நூர் ஹிஷாம் முஹம்மத் ஹாரோன், கால்நடை வளர்ப்பு, விலங்கு சுகாதாரம், உணவு உற்பத்தித் துறைகளின் முழு சூழலமைப்பையும் ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய தளமாக GAVIS 2026 அமையும் என்றார்.

அவரது கூற்றுப்படி, உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, கால்நடைத் துறையின் எதிர்கால சவால்கள், உணவுப் பாதுகாப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளன.

மேலும், பெரிய அமைப்புகள் மட்டுமின்றி, வளங்களின் பற்றாக்குறையால் தனித்து மாநாடுகளை நடத்த இயலாத சிறிய தொழில்சார் சங்கங்களுக்கும் இந்த உச்சிமாநாடு பெரும் வாய்ப்பாக அமையும் என அவர் தெரிவித்தார்.

ஜூலை 21 முதல் 23 வரை புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC) நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மலேசிய கால்நடை மருத்துவ சங்கம் (MAVMA), இந்தோனேசிய கால்நடை மருத்துவ சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகவுள்ளது. இதன் மூலம் ASEAN பிராந்தியத்தில் கால்நடைத் துறை ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறவுள்ளது.

‘One Voice, One Health, One Future’ என்ற கருப்பொருளில் நடைபெறும் GAVIS 2026, தொழில்துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசுத் துறைகளை ஒரே குடையின் கீழ் இணைத்து, மலேசியாவின் உணவுப் பாதுகாப்பு இலக்கை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சந்திப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.

மேலும், பிரதமர் அன்வார் இப்ராஹிம் கால்நடை, உணவுத் துறை சமூகத்தினருக்கு சிறப்பு உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset