நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை

கோலாலம்பூர்: 

கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் அசத்தலான அறிவிப்பாக, 2026 ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளின் முழுமையான ஒளிபரப்பை ஒரு போட்டிக்கு 1 ரிங்கிட்டுக்கும் குறைவான கட்டணத்தில் ரசிக்கும் வாய்ப்பை Unifi TV வழங்கியுள்ளது.

டெலிகோம் மலேசியா (TM) வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜூன் முதல் ஜூலை வரை நடைபெறும் உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவின் அனைத்து 104 போட்டிகளும் மூன்று சிறப்பு சேனல்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

முழு சீசன் பாஸ் 60 ரிங்கிட்டுக்கு வழங்கப்படுவதுடன், தற்போதைய Unifi TV சந்தாதாரர்கள் வெறும் 50 ரிங்கிட்டிற்கே சிறப்பு சலுகையைப் பெற முடியும்.

104 போட்டிகளுக்கான ஒளிபரப்பை 50 ரிங்கிட்டுக்கு பெறுவதன் மூலம், ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியையும் வெறும் 48 சென் செலவில் காண முடியும். இதனால், உலகக்கோப்பை வரலாற்றிலேயே ரசிகர்களுக்கு வழங்கப்படும் மிக மதிப்புமிக்க சலுகைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேலும், புதிய வாடிக்கையாளர்களும் மாதம் 12 ரிங்கிட் முதல் தொடங்கும் Unifi TV தொகுப்பில் இணைந்து உலகக்கோப்பை களைகட்டும் தருணங்களை நேரலையில் ரசிக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல், 2026 உலகக்கோப்பை சீசன் பாஸில் HBO, Cinemax, AXN, beIN SPORTS, SPOTV, tvN Movies உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பிரீமியம் சேனல்களுக்கான அணுகலும் 2026 ஜூன் 11 முதல் ஜூலை 10 வரை வழங்கப்படும்.

முழு சீசன் பாஸை வாங்க விரும்பாத ரசிகர்களுக்காக, 20 ரிங்கிட் மதிப்பிலான தினசரி பாஸும் ஜூன் 12 முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

TM-இன் வணிக, நுகர்வோர் பிரிவு தலைமை அதிகாரி ஆனந்த் விஜயன், இந்த முயற்சி மலேசியாவின் முன்னணி பொழுதுபோக்கு மையமாக Unifi TV-யின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்தார்.

மேலும், "உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான 2026 ஃபிஃபா உலகக்கோப்பையை ரசிகர்கள் எளிதாகவும், தடையற்ற முறையிலும், முழுமையான அனுபவத்துடனும் கண்டு ரசிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்" என்றார் அவர்.

உயர் தெளிவுத்திறன் (HD) தரத்தில் அனைத்து 104 போட்டிகளையும் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கண்டு மகிழலாம். அதோடு, போட்டி சிறப்பம்சங்கள், முழு மறுஒளிபரப்புகள், உலகக்கோப்பை தொடர்பான பிரத்யேக நிகழ்ச்சிகளும் வழங்கப்படும்.

ஸ்மார்ட் டிவி, கைப்பேசி, டேப்லெட், இணையதளம் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் வழியாக போட்டிகளை எங்கு இருந்தும் பார்ப்பதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனுடன், உணவகங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்களுக்கான சிறப்பு தொகுப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

48 நாடுகள் பங்கேற்கும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை, 104 போட்டிகளுடன் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறவுள்ள வரலாற்றிலேயே மிகப் பெரிய உலகக்கோப்பை தொடராக அமையவுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset