நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அக்‌ஷய திருதியை முன்னிட்டு கோலாலம்பூரில் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை நிறுவப்பட்டது

கோலாலம்பூர்:

இஸ்கான் எனப்படும் மலேசியாவின் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் கோலாலம்பூர் ஸ்ரீ ஜகந்நாத மந்திர் ஆலயத்தில் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை விழாவை வெற்றிகரமாக நடத்தியது. 

இது அக்‌ஷய திருதியை எனும் மங்களகரமான நாளில் நடைபெற்ற ஒரு சரித்திரமிகுந்த ஆன்மீக நிகழ்வாகும்.

நேற்று முன்தினம் தொடங்கி மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த விழா, பிராண பிரதிஷ்டை சடங்குகளுடன் நிறைவடைந்தது. 

இது இறைவன் விக்ரஹ வடிவத்தில் தோன்ற வேண்டி பிரார்த்தனையோடு அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய வேத முறையாகும். 

இந்த பிரதிஷ்டை, ஆலயத்திற்குள் ஒரு தெய்வீக இருப்பை நிலைநாட்டி, வழிபாடு, தியானம்,  பக்தி சேவைக்கான ஓர் இடத்தை உருவாக்குகிறது. 

இந்தியாவின் ஜெய்ப்பூரில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் பளிங்குத் திருவுருவங்கள், இந்த விழாவின் போது பிரதிஷ்டை செய்யப்பட்டன. 

இது, ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதரால் நிறுவப்பட்ட இஸ்கான் இயக்கத்தின் விக்ரஹ வழிபாட்டின் செழுமையான பக்தி, கலாச்சார மரபுகளைப் பிரதிபலிக்கிறது. 

இந்த நிகழ்வில் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

ஜெயபதாக சுவாமி மகாராஜர், பானு சுவாமி மகாராஜர், இஸ்கான் மலேசியாவின் இணை நிர்வாகக் குழு உள்ளிட்ட மூத்த இஸ்கான் ஆன்மீகத் தலைவர்கள், மற்ற மரியாதைக்குரிய மகாராஜாக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் மலேசிய தலைவர் டத்தோ லோகபால மோகனும் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

மலேசியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அத்துடன் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேசப் பங்கேற்பாளர்களும் கலந்துகொண்டு, பக்தர் சமூகத்தின் உலகளாவிய ஒற்றுமையைப் பிரதிபலித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய வேத சடங்குகள், பக்தி விழாக்கள், பிரசாதம் விநியோகம் ஆகியவை இடம்பெற்று, பங்கேற்பாளர்களுக்கு அமைதியான, ஆன்மீக எழுச்சியூட்டும் சூழலை உருவாக்கின.

விக்ரஹ பிரதிஷ்டையின் வெற்றிகரமான நிறைவு விழா, கோயிலுக்கும் சமூகத்திற்கும் ஒரு முக்கிய ஆன்மீக இலக்கைக் குறிக்கிறது.

இது வரும் தலைமுறைகளுக்கும் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் தொடர்ந்து பயனளிக்கும் ஒரு புனிதமான ஸ்தலத்தை உருவாக்கும் என்று இஸ்கான் மலேசியாவின் இணை கோயில் தலைவர் கிருபா சிந்து கிருஷ்ண தாஸ் கூறினார்.

பாரம்பரியமாக மிகவும் மங்களகரமான நாளாகக் கருதப்படும் அக்‌ஷய திருதியை அன்று நடைபெற்ற இந்த விழா, சிறப்பு ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. 

ஏனெனில், இந்த நாளில் செய்யப்படும் செயல்கள் நிலையான பலன்களைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற பல பக்தர்கள் அன்னதானத்திற்கு நிதியுதவி அளித்து, பல்வேறு கோயில் சேவைகளில் மிகுந்த ஆர்வத்துடன் தொண்டு செய்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset