நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தூல் எல்ஆர்டி ரயில் நிலையக் கழிப்பறைக்குள் பெண்ணைப் பின் தொடர்ந்த நபருக்கு 3,500 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர்:

செந்தூல் எல்ஆர்டி ரயில் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறைக்குள் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்ததற்காக, இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு உணவக ஊழியருக்கு 3,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.

22 வயதான அப்துல் சமாத் ஒஸ்மான், மாஜிஸ்திரேட் ஐனா அஸஹ்ரா அரிபின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் 16 அன்று காலை சுமார் 8 மணியளவில் செந்தூல் எல்ஆர்டி  ரயில் நிலையக் கழிப்பறையில் 43 வயதான பாதிக்கப்பட்ட பெண்ணைப் பின்தொடர்ந்து, அவர் மீது தகாத முறையில் தாக்குதல் நடத்தியதாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த அவரது வழக்கறிஞர் சி.எச். லோ, தனது கட்சிக்காரர் மாதத்திற்கு 1,500 ரிங்கிட் மட்டுமே சம்பாதித்து, தனது பெற்றோரை காப்பாற்றி வருவதால், தண்டனையைக் குறைக்குமாறு மேல்முறையீடு செய்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது செயலுக்காக வருந்தி மனம் திருந்தி இனி அதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்ததோடு, நீதிமன்றத்திடமும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடமும் மன்னிப்புக் கோரியதாகவும் லோ கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பாடம் புகட்டும் வகையில் தகுந்த தண்டனை விதிக்குமாறு துணை அரசு வழக்கறிஞர் ஷாபிகா அஸ்வா ஃபிக்ரி நீதிமன்றத்தைக் கேட்டு கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset