நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வறுமையை வென்ற விண்வெளி கனவு: நாசாவின் வரலாற்று மையத்தில் தடம் பதித்த தமிழ்ப் பெண் நந்தினி பழனிசாமி

கோலாலம்பூர்:

அடிப்படை வசதிகள்கூட ஆடம்பரமாகத் தெரிந்த ஒரு மிகச்சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, இன்று உலகமே வியக்கும் நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுப்பாட்டு அறையில் தடம் பதித்துச் சாதனை படைத்துள்ளார் தமிழ்ப் பெண் நந்தினி பழனிசாமி. 

சிறு வயதிலேயே வறுமையின் பிடியிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளக் கல்வி ஒன்றே சிறந்த வழி என்பதை உணர்ந்த அவர், தனது எஸ்.பி.எம் (SPM) தேர்வில் 10 பாடங்களிலும் 'ஏ' (10 As) பெற்றுத் தனது லட்சியப் பயணத்தைத் தொடங்கினார்.

தனது 12 வயதில் விண்வெளியைப் பற்றி அவர் கண்ட கனவு, சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று அவரது 32-வது வயதில் நனவாகியுள்ளது. 

குறிப்பாக, 'அப்போலோ' (Apollo) போன்ற வரலாற்றுப் புகழ்பெற்ற விண்வெளித் திட்டங்கள் இயக்கப்பட்ட நாசாவின் மிஷன் கண்ட்ரோல் அறையில், விண்வெளித் திட்டங்களை வழிநடத்தும் நிபுணர்களிடம் நேரடிப் பயிற்சி பெறும் அரிய வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

இந்தப் புகழ்பெற்ற தலைமைத்துவப் பயிற்சியில் (Leadership Training) பங்கேற்கும் ஒரே ஆசியப் பிரதிநிதி நந்தினி என்பது உலகத் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். 

"கல்விக்கு மதிப்பில்லை என்று கூறுபவர்களுக்கு மத்தியில், நான் கற்பனை செய்திராத உயரங்களுக்கு எனது கல்வி என்னை அழைத்துச் சென்றுள்ளது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள நந்தினியின் இந்தப் பயணம், கடின உழைப்பும் முறையான கல்வியும் இருந்தால் பிரபஞ்சத்தின் உச்சத்தையும் தொடலாம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset