செய்திகள் மலேசியா
பாலாக்கோங்கில் குடிவரவுத் துறையின் அதிரடிச் சோதனை: 133 வெளிநாட்டவர்கள் கைது
பாலாக்கோங்:
முறையான ஆவணங்களின்றி வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்திய இரண்டு தொழிற்சாலைகள் மீது அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், மொத்தம் 133 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவுத் துறைத் தலைவர் டத்தோ ஜகாரியா ஷாபான் தலைமையில், சுங்கம், சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 145 அதிகாரிகள் இந்த ஒருங்கிணைந்த சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 11 மணியளவில் பாலகோங் மற்றும் ஷா ஆலம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையின்போது மொத்தம் 162 பேர் பரிசோதிக்கப்பட்டதில், 133 வெளிநாட்டினர் குடிவரவுச் சட்டத்தை மீறியது கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 65 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த 18 பேர், மியான்மரைச் சேர்ந்த 17 பேர், நேபாளம், இந்தோனேசியா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடையாள ஆவணங்கள் இல்லாமை, விசா காலாவதியான பிறகும் தங்கியிருத்தல், அனுமதிச் சீட்டு விதிகளை மீறியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தச் சோதனையின் போது வரி செலுத்தப்படாத மதுபானங்கள், சிகரெட்டுகளையும் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காகக் குடிவரவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதக் குடியேறிகளைப் பணியில் அமர்த்துவது கடுமையான குற்றம் என்று எச்சரித்துள்ள அதிகாரிகள், வரும் ஏப்ரல் 2026-க்குள் நடைமுறையில் உள்ள 'புலம்பெயர்ந்தோர் தாயகம் திரும்பும் திட்டம் 2.0' (Migrant Repatriation Programme 2.0) பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த காலக்கெடுவிற்குப் பிறகு சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக மிகத் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 5:10 pm
சுங்கைப்பட்டாணியில் பரபரப்பு: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஷாபு போதைப்பொருள் பறிமுதல்
April 8, 2026, 4:55 pm
கோவிலில் மரக்கட்டை விழுந்ததில் இளம் பெண் உயிரிழந்தார்
April 8, 2026, 4:53 pm
ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்க 300 உதவி வார்டன்கள் நியமனம்: ஃபட்லினா
April 8, 2026, 4:51 pm
அமெரிக்கா, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை வரவேற்கத்தக்கது: பிரதமர்
April 8, 2026, 4:13 pm
