நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடியுரிமை பெறக் குறுக்கு வழி: சிக்கிய இந்தோனேசியத் தொழிலாளி

குவாந்தான்: 

குடியுரிமை பெற்ற இந்தோனேசியரான ஒருவர், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது குழந்தையின் பிறப்புப் பதிவுத் தகவல்களைத் திருத்துவதற்கான விண்ணப்பத்தின் போது, தவறான தகவல்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, திங்கட்கிழமை இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் RM8,000 அபராதம் விதிக்கப்பட்டார்.

58 வயதுடைய குற்றஞ்சாட்டப்பட்ட முஹம்மத் சஹால் சயாடி, மாஜிஸ்திரேட் தெங்கு எலியானா துவான் கமருஸாமான் நிர்ணயித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், 10 மாத சிறைத்தண்டனையையும் சந்திக்க நேரிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹாங் மாநில தேசியப் பதிவுத் துறையின் (JPN) வழக்குத் தொடரும் அதிகாரி ஃபக்ரோல் அனுவார் சானி சமர்ப்பித்த குற்றச்சாட்டுத் தாள், வழக்கு உண்மைகளின் படி, தற்போது 16 வயதாகும் தனது மகனின் பிறப்புப் பதிவில் தகவல்களைத் திருத்துவதற்கான விண்ணப்பத்தின் போது, கிழக்கு ஜாவா, கிரேசிக்கில் உள்ள பவீன் மத நீதிமன்றத்தின் போலியான விவாகரத்துச் சான்றிதழை அந்தக் கட்டுமானத் தொழிலாளி வேண்டுமென்றே சமர்ப்பித்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் உள்ள இந்தோனேசிய குடியரசின் தூதரகத்தால் ஆகஸ்ட் 7, 2025 அன்று வெளியிடப்பட்ட இந்தோனேசிய குடிமகனின் (WNI) விவாகரத்துச் சான்றிதழ் உறுதிப்படுத்தல் கடிதத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பில், சமர்ப்பிக்கப்பட்ட விவாகரத்துச் சான்றிதழின் தொடர் எண் பதிவு செய்யப்படாத போலியானது என்று உறுதிப்படுத்தப்பட்டது.

ஒரு இந்தோனேசியப் பெண்ணுடனான தனது முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைக்கான குடியுரிமை நிலையைப் பெறும் நோக்கத்திலேயே குற்றஞ்சாட்டப்பட்டவர் இவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.

செப்டம்பர் 30, 2024 அன்று மதியம் 3.30 மணியளவில், பஹாங் மாநில ஜே.பி.என்.-இன் பிறப்பு, இறப்ப , தத்தெடுப்புப் பிரிவு கவுன்டரில் இந்தக் குற்றத்தை அவர் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றத்திற்காக, 10 குழந்தைகளின் தந்தையுமான குற்றஞ்சாட்டப்பட்டவர், 1957 ஆம் ஆண்டின் பிறப்பு, இறப்புப் பதிவுச் சட்டத்தின் (சட்டம் 299) பிரிவு 36(1)(b) கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், RM20,000 க்கு மிகாமல் அபராதம், அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர், குறைந்தபட்ச அபராதத் தொகையை விதிக்குமாறு மனு செய்தார்.

ஒரு தொழிலாளியாக தனது மாத வருமானம் RM1,000 மட்டுமே என்பதையும், தனது மனைவி, 10 குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் அவர் தனது மனுவிற்குக் காரணமாகக் கூறினார்.

எவ்வாறாயினும், பொது நலனைக் கருத்தில் கொண்டு, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அதற்கேற்ற தண்டனை வழங்குமாறு வழக்குத் தொடர்பு தரப்பு கோரியது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset