நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி அடையாளங்களுடன் நடமாடும் வெளிநாட்டவர்கள்: புகைப்படத் தொழிலில் ஊடுருவியுள்ள சட்டவிரோதக் கும்பலுக்குத் தடை

புத்ராஜெயா: 

தலைநகரில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 'ஊலாட் ஃபோட்டோ' எனப்படும் புகைப்பட ஆர்வலர்களுக்கு அரசாங்கம் எந்தவொரு சிறப்பு அனுமதியையும் வழங்காது.

சாலைப் பயனர்களின் பாதுகாப்புக் காரணிகள், அந்த நடவடிக்கைகள் குறித்து எந்த சமரசமும் இல்லாமல் செயல்படத் தம்மைத் தூண்டுவதாகப் பிரதமர் துறை அமைச்சர் (கூட்டாட்சிப் பகுதிகள்) ஹன்னா யோஹ் தெரிவித்தார்.

"அந்தச் சாலை சந்திப்பு புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பானது அல்ல. எனவே, அனுமதி வழங்குவதை நம்மால் பரிசீலிக்க முடியாது" என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைப்பெற்ற இளம் தலைமுறைக்கான சர்வதேச மொழி தேர்ச்சி முன்னெடுப்பு, புத்ராஜெயா சமூக இயக்க உதவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர்  இங்குள்ள கார்சோம் கண்காட்சி அறையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்நிகழ்வில் கார்சோம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் செங் அவர்களுடன் புத்ராஜெயா கழகத்தின் தலைவர் டத்துக் முஹம்மத் சாக்கேரி அப்துல் காதிர் ஆகியோரும் உடனிருந்தனர்.

புகைப்பட ஆர்வலர்களின் சேவை நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொருட்டு, கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) அந்தச் சந்திப்பில் கூடுதல் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவியுள்ளதாக ஹன்னா கூறினார்.

"சுற்றுலாப் பயணிகள் புகைப்பட ஆர்வலர்களின் சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் அறிவிப்புகளை வெளியிட, டி.பி.கே.எல் அந்தப் பகுதியில் ஐந்து மொழிகளில் ஒலிபரப்பு அமைப்பையும் நிறுவியுள்ளது" என்று அவர் விளக்கினார்.

போலிஸாரும் டி.பி.கே.எலும் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையானது, போலி அடையாளங்களைப் பயன்படுத்தும் வெளிநாட்டவர்களால் முன்னெடுக்கப்படும் அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஒடுக்கியதாக ஹன்னா கூறினார்.

"அவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல, மாறாக போலி அடையாளங்களைப் பயன்படுத்தும் வெளிநாட்டவர்கள் என்பதாகும்" என்று அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம், பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் (KLCC) சுற்றுப்பகுதியில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில், புகைப்பட ஆர்வலர்களாக இருந்த ஒரு பெண் உட்பட 25 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் சஜாலீ ஆதாம், இரவு 10 மணிக்குத் தொடங்கிய நடவடிக்கையில், 23 ஆண்கள், ஒரு உள்ளூர் பெண், 16 முதல் 48 வயதுக்குட்பட்ட ஒரு பிலிப்பைன்ஸ் ஆண் என 25 பேர் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்தார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 148/324-ன் கீழ் விசாரணைக்கு உதவும் வகையில், அனைத்து நபர்களும் மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset