செய்திகள் தொழில்நுட்பம்
இசைக் கலைஞர்கள் இனி தேவை இல்லையா?: இசை உலகை ஆட்டிப்படைக்கும் ஏஐ
லாஸ் ஏஞ்சல்ஸ்:
செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்படும் இசை உள்ளடக்கத்தின் அலை, ஸ்ட்ரீமிங் தளங்களை அதிகளவில் நிரப்புவதாகக் காணப்படுகிறது. இது, கலைஞர்களின் படைப்பாற்றல் அதிகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறும் இசைக்கலைஞர்களிடையே கவலையைத் தூண்டியுள்ளது.
கடந்த பிப்ரவரி இறுதியில், பிரிட்டனைச் சேர்ந்த பாடகரும் பாடலாசிரியருமான பெனடிக்ட் கார்க், 'சம்திங் கைண்டா ஸ்ட்ரேஞ்ச்' என்ற தன் படைப்பிலான புதிய பாடலைத் தான் பாடும் குறுங்காணொலியாக பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்தக் காணொலி விரைவாக டிக்டோக்கில் 100,000 க்கும் அதிகமான பார்வைகளுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது. ரசிகர்கள் முழுப் பதிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
எவ்வாறாயினும், சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பாடல் வெளியீடு குறித்த செய்திகளைக் கார்க் பெறத் தொடங்கினார். இது வித்தியாசமானதாகக் கருதப்பட்டது, ஏனெனில் அவர் இன்னும் அந்தப் பாடலை முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில், அந்தப் பாடல் வேறொரு நபரின் பெயரின் கீழ் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஏற்கனவே கிடைக்கப்பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பதிப்பு, பின்னணி இசை, துணைக் குரல்களுடன் முழுமையாக இருந்தது மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கூடுதல் வரிகளையும் கொண்டிருந்ததாக டைம் இதழ் தெரிவித்துள்ளது.
கார்க், முதலில் இந்த விஷயத்தை வேடிக்கையாகக் கருதியதாகவும், பின்னர் செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்பத்தைக் கண்டு வியந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இறுதியில், தனது பணி திருடப்பட்டு, அனுமதியின்றி எடுக்கப்பட்டதை உணர்ந்து கார்க் கோபமடைந்தார்.
இந்தச் சம்பவம், அதிகரித்து வரும் ஒரு கவலைக்கிடமான போக்கைப் பிரதிபலிக்கிறது. செயற்கை நுண்ணறிவின் இசை ஜெனரேட்டர்களின் பயன்பாட்டால், அதிகமான இசைக்கலைஞர்கள் தற்போது ஆரோக்கியமற்ற போட்டி அல்லது படைப்புத் திருட்டை எதிர்கொள்கின்றனர்.
டீசர் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள், ஒவ்வொரு நாளும் தோராயமாக 50,000 செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய பாடல்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாக வெளிப்படுத்தியுள்ளன. இது புதிய இசையில் 34 சதவீதத்தை உள்ளடக்கியதாகும்.
இதற்கிடையில், சோனி மியூசிக் நிறுவனம், தங்கள் கலைஞர்களாகப் போலியாக உருவாக்கப்பட்ட 135,000 க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு பாடல்களை நீக்கக் கோரியுள்ளதாகத் தெரிகிறது.
சிலர் செயற்கை நுண்ணறிவை இசை உருவாக்கத்தை மக்களாட்சிப்படுத்தும் ஒரு கருவியாகப் பார்க்கும் அதே வேளையில், பல இசைக்கலைஞர்கள் இந்தத் துறையானது இயந்திரங்களால் உருவாக்கப்படும் 'மலிவான' உள்ளடக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் போக்கைக் கொண்டிருப்பதாகக் கவலைப்படுகிறார்கள். இது புதிய அல்லது சுயாதீன கலைஞர்கள் வருமானம் ஈட்டுவதை கடினமாக்குகிறது என்று டைம் இதழ் தெரிவிக்கிறது.
தான் எதிர்கொண்ட படைப்புத் திருட்டு குறித்து கருத்துத் தெரிவித்த கார்க், "இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அருமையானது, நானே அதை என் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகிறேன்.
"இருப்பினும் கலை, படைப்பாற்றல் மதிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும், இல்லையெனில், இசைத் துறையே அழிந்துவிடும்" என்றார்.
சமீபத்திய ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு பல்வேறு வடிவங்களில் இசைத் துறையில் ஆழமாக ஊடுருவியுள்ளது. இதில் படைப்பு கூட்டுப்பணிகள் முதல் மோசடிகள் வரை அடங்கும். சில இசை ஆர்வலர்கள் செயற்கை நுண்ணறிவை ஒரு உதவிக் கருவியாகப் பயன்படுத்துகின்றனர் (புகழ்பெற்ற தயாரிப்பாளர் டிம்பாலேண்ட் போன்றவர்), அதே சமயம் சில பாடலாசிரியர்கள் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான 'இசை அவதார்களை' உருவாக்குகின்றனர்.
எவ்வாறாயினும், முக்கிய பிரச்சனையானது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ரசிகர்களை ஏமாற்றும் பொறுப்பற்ற நபர்களிடமிருந்து வருகிறது.
ஸ்ப்போட்டிஃபை போன்ற தளங்கள், உண்மையான கலைஞர்களாகப் போலியாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவின் உள்ளடக்கம் உட்பட, ஒரு வருடத்தில் 75 மில்லியனுக்கும் அதிகமான ஸ்பேம் டிராக்குகளை நீக்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த மோசடிகளின் இலக்குகளாக, உண்மையான ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அல்லது நீண்ட காலமாக செயலற்ற நிலையில் உள்ள கலைஞர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் சுயாதீன பாடகி ஒர்மெல்லாவையும் இதே நிலை தாக்கியது. அவர் நேரடி ரெக்கார்டிங்கின் ஒரு EP-ஐ வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அவரது சுயவிவரத்தில் செயற்கை நுண்ணறிவு பாடல் ஒன்று தோன்றியது.
இந்த விஷயம், அந்தப் பாடலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இசைப் பதிவேற்றங்களை நிர்வகிக்கும் மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு முறையில் உள்ள பலவீனமே, பொறுப்பற்ற நபர்கள் கலைஞர்களாகப் போலியாக நடித்து, சிறிய அளவிலான லாபத்தை அதிகமாக பெற அனுமதிக்கிறது என்று ஒர்மெல்லா கூறியுள்ளார்.
கலைஞர்களிடமிருந்து வந்த தொடர்ச்சியான புகார்களைத் தொடர்ந்து, ஸ்ப்போட்டிஃபை, 'கலைஞர் சுயவிவரப் பாதுகாப்பு' எனப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது இசைக்கலைஞர்கள் உள்ளடக்கம் வெளியிடப்படுவதற்கு முன் அதைச் சரிபார்க்க அனுமதிக்கிறது.
இருப்பினும், மற்ற தளங்களில் இந்தப் பிரச்சனை இன்னும் அதிகமாக இருப்பதாக ஒர்மெல்லா கருதுகிறார். மேலும், பிரபலமான பிளேலிஸ்ட்களில் உண்மையான கலைஞர்களின் படைப்புகளை செயற்கை நுண்ணறிவு பாடல்கள் மாற்றக்கூடும் என்ற தனது கவலையையும் அவர் வெளிப்படுத்தினார். செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய உள்ளடக்கம் குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், தொடர்புடைய வளர்ச்சியில், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். நார்த் கரோலினாவைச் சேர்ந்த ஒரு நபர், லட்சக்கணக்கான செயற்கை நுண்ணறிவு பாடல்களை உருவாக்கி, ஸ்ட்ரீம்களை அதிகரிக்க போட்களைப் பயன்படுத்தி, சுமார் AS$8 மில்லியனுக்கும் அதிகமான (சுமார் RM38 மில்லியன்) ராயல்டிகளைப் பெற்ற மோசடி வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கார்க், இறுதியில் அந்தப் போலிப் பாடலை நீக்குவதில் வெற்றி பெற்றார். இருப்பினும், அந்தச் சம்பவம் அவருக்குள் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
"இப்போதே செயற்கை நுண்ணறிவு இப்படிப்பட்ட படைப்புகளை உருவாக்க முடியும் என்றால், அடுத்த பத்து ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும்?
"மனிதர்கள் இன்னும் பாடல்களை எழுதுவார்களா, அல்லது எல்லாமே ரோபோக்களிடம் ஒப்படைக்கப்படுமா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 11:50 am
சிறுவர்கள் வாழ்க்கையில் விளையாடிய மெட்டா: 375 மில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்
March 24, 2026, 12:34 pm
காப்புரிமைப் போர்: சீனத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே முற்றிய மோதல்
March 23, 2026, 10:31 am
வெளிநாட்டு அனிமேஷன் தாக்கம்: குழந்தைகள் சிந்தனைக்கு புதிய அறைகூவல்
March 22, 2026, 5:22 pm
உலகின் முதல் 'தொழுகைக்கு உகந்த' செயற்கை கால்: மலேசியப் பேராசிரியரின் சாதனைப் படைப்பு
March 13, 2026, 12:48 pm
சிப் வடிவமைப்புத் துறையில் சாதனை: ‘Arm’ நிறுவனத்துடன் கைகோர்க்கும் மலேசியா
March 13, 2026, 12:45 pm
பசுமை தொழில்நுட்பத்தில் ஜொகூர் முன்னிலை: ‘ZData’ மையத்திற்கு சான்றிதழ் வழங்கல்
March 11, 2026, 12:12 pm
வான் ஆலன் விண்கலத்தின் இறுதிப் பயணம்: 14 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறது
February 24, 2026, 12:08 pm
கூடுதல் தொழில்நுட்பம், AI இல்லாத புதிய தரவு மையங்களின் அனுமதி நிறுத்தம்: பிரதமர் அன்வார்
February 23, 2026, 10:30 am
