நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்

பினாங்கு:

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியும், இளம் தலைமுறையினரின் மாறிவரும் செய்தி நுகர்வு பழக்கவழக்கங்களும் ஊடகத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மலேசிய செய்தி நிறுவனங்களை எதிர்கால சவால்களுக்குத் தயார்படுத்தும் நோக்கில் Google இரண்டு முக்கிய முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

HAWANA 2026 தேசிய பத்திரிகையாளர்கள் தினக் கொண்டாட்டத்தில் அறிவிக்கப்பட்ட ‘Project Sigma 2.0’, ‘Project Berita’ ஆகிய திட்டங்கள், தகவல் தொடர்பு அமைச்சு, மலேசிய ஊடக மன்றம் (MMM) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

Project Sigma 2.0, 2024-இல் அறிமுகமான முன்னோடி திட்டத்தின் விரிவாக்கமாகும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 20 சிறிய, நடுத்தர அளவிலான செய்தி நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப கருவிகள், செயல்திட்ட வழிகாட்டுதல்கள், நிபுணர் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, Generation Z தலைமுறையினரைச் சிறப்பாக சென்றடையும் புதிய செய்தி வடிவங்கள், டிஜிட்டல் அணுகுமுறைகளை உருவாக்க இந்தத் திட்டம் உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, Project Berita திட்டம், ஊடகத் துறையில் AI பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் திறன் மேம்பாடு, தொழில்முறை பயிற்சிகளில் கவனம் செலுத்துகிறது. பத்திரிகையாளர்கள், ஊடகப் பணியாளர்கள், ஆசிரியர் குழுத் தலைவர்களுக்கு AI தொடர்பான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், Universiti Kebangsaan Malaysia (UKM) நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் #AiYOH (AI Literacy Empowerment Workshop) பயிற்சி முகாம்களை நடத்தவுள்ளது. மேலும், Malaysian Press Institute (MPI) பத்திரிகையாளர்கள், மூத்த ஆசிரியர்களுக்கான ஐ, செய்தியறை மேலாண்மை தொடர்பான சிறப்பு பயிற்சிகளை ஏற்பாடு செய்யும்.

தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், புதிய தொழில்நுட்பங்களைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் பயன்படுத்தும் திறனை ஊடகத் துறையினர் வளர்த்துக்கொள்ள அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று தெரிவித்தார்.
மலேசிய ஊடக மன்றத்தின் தலைவர் நல்லினி பத்மநாதன், ஊடக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், தொழில்துறை நிபுணர்களின் ஒத்துழைப்பே மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தி, நாட்டின் ஊடகத் துறையின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்யும் என்று வலியுறுத்தினார்.

AI ஆதிக்கம் செலுத்தும் புதிய ஊடக உலகில், மலேசிய பத்திரிகைத்துறையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் முக்கிய முன்னெடுப்புகளாக Project Sigma 2.0 மற்றும் Project Berita கருதப்படுகின்றன. மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset