நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ஏஐ-க்காக மெட்டாவின் மெகா பிளான்: 8,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு

நியூயார்க்: 

மெட்டா, தற்போது செயற்கை நுண்ணறிவில் (ஏஐ) நிறுவனத்தின் பெரிய முதலீட்டை ஈடுகட்டும் வகையிலும் ஊழியர்களின் உற்பத்தித்திறன் அதிகரிப்பதை இது உறுதி செய்யவும் தனது பணியாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. 

இதனால், சுமார் 8,000 ஊழியர்களை மெட்டா பணிநீக்கம் செய்யும் என்றும், அடுத்த மாதம் ஆயிரக்கணக்கான பதவிகளை நிரப்பாமல் விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட், ஓப்பன்ஏஐ உள்ளிட்ட போட்டியாளர்களுடன் மோதுவதற்கான அதிக செலவாகும் வகையில் செயற்கை நுண்ணறிவுப் பந்தயத்தில், இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஸக்கர்பெர்க் 'மீநுண்ணறிவு' மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் இதுவரை செய்யாத ஒரு நடவடிக்கையாக அமெரிக்காவில் உள்ள சில ஊழியர்களுக்கு தன்னார்வ ஈடுசெய்யும் திட்டத்தின் மூலம், தனது பணியாளர்களைக் குறைப்பதைக் கருத்தில் கொண்டுள்ளதாக வியாழக்கிழமை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

சி.என்.பி.சி. அறிக்கையின்படி, மைக்ரோசாப்ட்டின் மூத்த இயக்குநர் நிலை அல்லது அதற்குக் கீழ் உள்ள, 70 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் ஊழியர்களை இலக்காகக் கொண்டு, அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட் ஊழியர்களில் சுமார் 7 சதவீதத்தினர் அந்தச் சலுகையைப் பெறத் தகுதியுடையவர்களாகத் தெரிகிறது.

மெட்டாவும், மைக்ரோசாப்டும் அடுத்த வாரம் தங்கள் காலாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரியில், ஏஐ-இல் மேற்கொண்ட முதலீடுகளுடன் வருவாய் அதிகரித்ததால், சந்தை எதிர்பார்ப்புகளை மீறிய காலாண்டு வருவாயை மெட்டா அறிவித்தது.

இருப்பினும், அதன் செலவுகள் AS$35.15 பில்லியனாக (139.5 பில்லியன் ரிங்கிட்) இருந்தன, இது முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வருவாய் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏஐ-ஐ ஆதரிப்பதற்கான தரவு மையங்கள் போன்ற உள்கட்டமைப்பு உட்பட மூலதனச் செலவுகள், அந்தக் காலாண்டில் AS$22.14 பில்லியனாக (87.8 பில்லியன் ரிங்கிட்) இருந்தன.

மெட்டா சூப்பரிண்டலிஜென்ஸ் லேப்ஸ், அதன் முக்கிய வணிகத்தில் அதிகரித்த முதலீட்டின் காரணமாக, இந்த நிதியாண்டிற்கான மூலதனச் செலவுகள் AS$115 பில்லியனிலிருந்து (456 பில்லியன் ரிங்கிட்) AS$135 பில்லியன் வரை (535 பில்லியன் ரிங்கிட்) இடையில் இருக்கும் என்று மெட்டா எதிர்பார்க்கிறது.

ஏஐ-இல் பெரும் முதலீடு செய்யும் பந்தயத்தில் ஈடுபட்டுள்ள பிற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தீவிரப் போட்டியில் மெட்டா தற்போது ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் அந்தத் தொழில்நுட்பம் லாபத்தை அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

விளம்பரத் திறனை மேம்படுத்துவதன் மூலமும், ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலமாக (Ray-Ban தயாரிப்பாளர் EssilorLuxottica-உடனான கூட்டுப்பணியின் மூலம்) போன்ற புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், மெட்டா இந்த முதலீடுகளில் இருந்து வருமானத்தைப் பெறும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

வெட்புஷ் ஆய்வாளர் டான் ஐவ்ஸ், மெட்டா தனது செலவினங்களை அதிகபட்ச நிலைக்கு உயர்த்தி வருவதாகவும், ஏஐ கூட்டாளர்களுடன் பில்லியன் டாலர் ஒப்பந்தங்களை அறிவித்து, குறியீடு, பிற பணிகளுக்கு ஏஐ முகவர்களைப் பயன்படுத்தி ஊழியர்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.

திறனை மேம்படுத்த ஏஐ-யைப் பயன்படுத்துவதற்கான உத்தியின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு மேலும் பணிநீக்கங்கள் மெட்டாவில் ஏற்படக்கூடும் என்று ஐவ்ஸ் எதிர்பார்க்கிறார்.

"முன்னர் பெரிய அணிகள் தேவைப்பட்ட பணிகளை தானியக்கமாக்க, ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதற்கான மெட்டாவின் உத்தியின் ஒரு பகுதி இது என நாங்கள் நம்புகிறோம். இது, செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் நிறுவனத்தை அனுமதிக்கிறது" என்று அவர் முதலீட்டாளர்களுக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவில் முதலீட்டை அதிகரிப்பது முன்னேற்றத்தின் அடையாளமாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் இழக்கப்படுவது சமூக ரீதியாக கவலைக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset