நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பொம்பெய் பேரழிவு: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உயிர்பெற்ற இறுதி நொடிகள்

ரோம்:

கி.பி 79-ஆம் ஆண்டில் இத்தாலியின் வெசுவியஸ் (Vesuvius) எரிமலை வெடித்தபோது, பொம்பெய் நகரில் உயிரிழந்த ஒரு மனிதனின் தோற்றத்தையும், அவரின் இறுதித் தருணங்களையும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக மறுஉருவாக்கம் செய்துள்ளனர். 

'போர்டா ஸ்டேபியா' எனும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மனித எலும்புக்கூட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த மனிதன் தனது தலையைப் பாதுகாப்பதற்காக ஒரு பெரிய மண்பாண்டத்தைத் தலைக்கு மேல் பிடித்தபடி ஓடும் காட்சியை செயற்கை நுண்ணறிவு (AI)  தொழில்நுட்பம் தத்ரூபமாகச் சித்திரமாக்கியுள்ளது.

அகழ்வாராய்ச்சியின் போது, அந்த எலும்புக்கூட்டின் அருகே ஒரு பெரிய மண்பாண்டம், சிறிய எண்ணெய் விளக்கு, சில வெண்கல நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. 

எரிமலை வெடிப்பின் போது சாம்பல், கற்கள் மழை போலப் பொழிந்த வேளையில், அந்த நபர் கடற்கரையை நோக்கித் தப்பிக்க முயன்றபோது பாறைகள் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

அவர் பயன்படுத்திய மண்பாண்டத்தில் கற்கள் மோதியதற்கான அடையாளங்கள் இருப்பதே இதற்குச் சான்றாகக் கூறப்படுகிறது.

இந்த செயற்கை நுண்ணறிவின் மறுஉருவாக்கம் தற்போது ஒரு சோதனை முயற்சியாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய பொம்பெய் தொல்பொருள் பூங்காவின் இயக்குனர் கேப்ரியல் சுத்ரிகல், இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் தொல்பொருள் ஆய்வுகளைப் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் என்று தெரிவித்தார். 

18-ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட இந்த பண்டைய நகரம், ரோமானியப் பேரரசின் வாழ்க்கை முறையை உலகிற்குச் சொல்லும் ஒரு காலப்பெட்டகமாக விளங்குவதோடு, தற்போது இத்தாலியின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset