நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு: ஹிந்துத்வா தலைவர் மீது வழக்குப் பதிவு

டேராடூன்:

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக பகையைத் தூண்டும் விதத்தில் ஹிந்துத்வா தலைவர்கள் வன்மத்துடன் பேசியது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த வாரம் உத்தரண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஜுனா அகாரா ஆசிரமத் தலைவர் யதி நரசிம்மானந்த் கிரி சார்பில் மத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பலர், இந்தியாவை ஹிந்து தேசமாக்க வேண்டும் என்று கூறியதோடு முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் வன்மத்துடன் பேசினர்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது ஹரித்வாரின் ஜுவாலாபூர் பகுதியைச் சேர்ந்தவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மதம், பிறப்பிடம், வாழ்விடம், மொழி உள்ளிட்டவற்றின்பேரில் இரு பிரிவினர் இடையே பகையைத் தூண்ட முயற்சித்ததாக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153ஏ பிரிவின் கீழ் காவல்துறையினர் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

மத நிகழ்ச்சியை நடத்திய யதி நரசிம்மானந்த் கிரி மீது முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் பேசியதாக ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

பிரியங்கா கண்டனம்:

இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா வதேரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "ஹரித்வார் நிகழ்ச்சியில் ஹிந்து மதத் தலைவர்கள் பேசியவை இந்திய அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் புறம்பானவை. இதுபோல வெறுப்புணர்வையும் வன்முறையையும் தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி:

இந்தச் சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ஹிந்துத்துவவாதிகள் வெறுப்புணர்வையும் வன்முறையையும்தான் எப்போதும் பரப்புகின்றனர்.

ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் அதற்கான விலையை அளிக்கின்றனர். ஆனால் இனி அது நடக்காது' என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset