நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஐஐடி கல்வி நிறுவனம் உட்பட பல கல்வி நிறுவனங்கள் உருவாக காரணமான மவுலானா அபுல் கலாம் ஆசாத்; தேசிய கல்வி தினத்தில் நினைவு கூர்வோம்: எம் எச் ஜவாஹிருல்லா

சென்னை:
 
சுதந்திர இந்தியாவின் முதல்  கல்வி அமைச்சராகப் பணியாற்றிய மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 11) தேசியக் கல்வி தினமாக  கடைப்பிடிக்கப்படுகின்றது. அவரை நினைவுகூருவது நமது கடமை என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.  

சிறந்த பத்திரிகையாளராகவும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்த அபுல் கலாம் ஆசாத் இந்தியத் தேசியக் காங்கிரஸில் இணைந்து காந்தியடிகளுடன் தோழமையாக இருந்து உப்பு அணிவகுப்பு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். 

ஆங்கிலேயர்களால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்தவர்.   விடுதலைக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மிக இளம் தலைவராக அவரது 35 வயதில் 1923ல் டெல்லி காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய சிறப்பு இவருக்கு உண்டு. 1940 முதல் 1946 வரை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பும் இவருக்கு மட்டுமே உண்டு.

விடுதலை அடையும் இந்தியா இரு நாடுகளாகப் பிரிவதைக் கடுமையாக  எதிர்த்தவர். விடுதலைப் பெற்ற இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கிய அரசியலமைப்பு  சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

மவ்லானா ஆசாத் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் கிராமப்புற மற்றும் பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததோடு நாடு முழுவதும் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை மக்களுக்கு அளிப்பதற்கான தேசியக் கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.

1951-ல் முதலாவது ஐஐடி கல்வி நிறுவனம், 1953-ல் பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) ஆசாதின் முயற்சியினால் தொடங்கப்பட்டன. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் அரசுத்  துறைகளிலும் கல்விக்கான அமைப்புகளையும் துறைகளையும் உருவாக்கியவர். டெல்லி பல்கலைக்கழகத்திற்குள் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங்கை உருவாக்கியவர். பல கல்வி ஆணையங்களையும் உருவாக்கியதோடு பள்ளிக்கூட மேல்நிலைக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும். 

கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில், அடிப்படை கல்விக்கான தேசியக் கழகம், லலித் கலா அகாடமி, அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக்கான அகில இந்திய கவுன்சில், டெல்லி பாலிடெக்னிக் போன்றவை அனைத்தும் இவரால் உருவாக்கப்பட்டன. 

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் ஆசாத்தின் முயற்சி அர்ப்பணிப்பானதாக இருந்தது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இவர் மறைந்த பின் 1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
 
தற்போதைய ஒன்றிய பாஜக அரசு ஆசாத் உருவாக்கிய பல்கலைழக மானிய ஆணையத்தைக் கலைத்துள்ளது.  தேசியப் பாடநூல் நிறுவனத்தின் 11 ஆம் வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து மவ்லானா அபுல் கலாம் ஆசாத் குறித்த பாடப்பகுதியை நீக்கியுள்ளது.சிறுபான்மை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கும் மவ்லானா ஆசாத் கல்வி நிறுவனத்தையும் கலைத்துள்ளது. இதுவே ஒன்றிய பாஜக அரசு ஓரு மாபெரும் விடுதலைப் போராட்ட வீரருக்கு அளிக்கும் மரியாதை!
 
தமிழ்நாடு அரசு மவ்லானா ஆசாத் அவர்கள் பிறந்த தினமான தேசிய கல்வி தினத்தை அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கட்டாயம் கொண்டாட உத்தரவிட வேண்டும். மவ்லானா ஆசாத் பெயரில் ஒன்றிய அரசு நிறுத்திய அனைத்துக் கல்வி உதவித் தொகைகளையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

தற்போதைய இந்தியச் சூழ்நிலையில் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வி வணிகமயமாகிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. அனைவருக்குமான கல்வி அவசியம் என்பதை தொலை நோக்கு பார்வையோடு வகுத்துத் தந்த அப்துல் கலாம் ஆசாத்தின் நினைவை அனைவரும் நெஞ்சில் ஏந்துவோம். அவர் கண்ட கல்வி கனவை மெய்ப்பிக்க கரம் கோர்ப்போம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறினார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset