செய்திகள் இந்தியா
"ராகுல் காந்திக்கு அடிப்படை அரசியல் புரியவில்லை": கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதிலடி
கோதமங்கலம்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் தொண்டனுக்கு இருக்கும் புரிதல் கூட இல்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி ஒரு தேசியத் தலைவராக இருந்தாலும், யதார்த்த நிலையைச் சரியாகப் புரிந்துகொள்ள மறுப்பதாகவும், தொடர் தோல்விகளுக்குப் பிறகும் அவர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் சாடினார்.
முதல்வர் பினராயி விஜயன் மீதான ஊழல் புகார்கள் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததே, கேரள ஆளும் இடதுசாரி முன்னணிக்கும், (LDF) பாரதிய ஜனதா கட்சிக்கும் (BJP) இடையிலான ரகசியக் கூட்டணிக்குச் சான்று என்று ராகுல் காந்தி நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பினராயி விஜயன், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதலில் கைது செய்யக் கோரியதே காங்கிரஸ்தான் என்பதைச் சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்தால் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்ட சம்பவம் ராகுல் காந்திக்கும் காங்கிரஸுக்கும் விழுந்த அடி என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக கோழிக்கோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தம்மீது 40 வழக்குகள் இருப்பதையும், அமலாக்கத்துறை தம்மை ஐந்து நாட்கள் விசாரணை செய்ததையும் குறிப்பிட்டுப் பேசினார்.
ஆனால், கேரள முதல்வர் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், இடதுசாரி அரசின் தவறான கொள்கைகளால் கேரள இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வருகின்ற ஏப்ரல் 9-ஆம் தேதி கேரளா சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு இடையிலான இந்த நேரடி மோதல் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பாஜகவின் "நிழல்" என்று சாடி வருவது தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
