செய்திகள் இந்தியா
"எனது வாகனத்தில் இஸ்லாமியர்களுக்கு அனுமதியில்லை": ரேபிடோ ஓட்டுநர் பணிநீக்கம்
டெல்லி:
நாட்டின் தலைநகரான டெல்லியில், பயணி ஒருவரின் மதத்தைக் காரணம் காட்டி அவரை வாகனத்தில் ஏற்ற மறுத்த ஓட்டுநரின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 21-ஆம் தேதி ஈகைத் திருநாள் அன்று, அ. ஜெய்ன் என்பவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் 16 வினாடிகள் கொண்ட ஒலிப்பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த ஒலிப்பதிவில், பயணியை ஏற்றிச் செல்ல மறுத்த ஓட்டுநரிடம், "நான் ஒரு இஸ்லாமியர் என்பதால் மறுக்கிறீர்களா?" எனப் பயணி கேட்கும் போது, "ஆம், எனது வாகனத்தில் இஸ்லாமியர்களுக்கு அனுமதியில்லை" என ஓட்டுநர் மிகத் துணிச்சலாகவும் வன்மமாகவும் பதிலளிப்பது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான ஒலிப்பதிவு இணையத்தில் வேகமாகப் பரவியதை அடுத்து, சம்பந்தப்பட்ட 'ரேபிடோ' (Rapido) நிறுவனத்திற்குப் பொதுமக்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
அன்றாடச் சேவைகளில் இத்தகைய மதப் பாகுபாடு காட்டப்படுவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பயணியிடம் மன்னிப்பு கோரியுள்ள ரேபிடோ நிறுவனம், அநாகரிகமாக நடந்துகொண்ட அந்த ஓட்டுநரைத் தனது சேவையிலிருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரேபிடோ நிறுவன செய்தித் தொடர்பாளர், "எங்கள் நிறுவனத்தில் எவ்விதமான பாகுபாடுகளுக்கும் இடமில்லை. முறையான காரணமின்றி வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்க மறுப்பதை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பான, மரியாதையான பயண அனுபவத்தை உறுதி செய்வதில் தங்களது நிறுவனம் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
