நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RM7 ரிங்கிட்டிற்கு கோழி விற்பனை: புக்கிட் காந்தாங்கில் அலைமோதிய கூட்டம்

புக்கிட் காந்தாங்: 

பேராக் மாநிலத்தின் புக்கிட் காந்தாங் நாடாளுமன்றத் தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மலிவு விலை விற்பனைத் திட்டத்தில், சுமார் 2,000 கோழிகள் வெறும் 40 நிமிடங்களுக்குள் விற்றுத்தீர்ந்தன.

ஒரு கிலோ கோழி இறைச்சி RM7 ரிங்கிட் என்ற மிகக் குறைந்த விலையில் வழங்கப்பட்டதே இந்த அமோக வரவேற்பற்குக் காரணமாக அமைந்தது. காலை 8 மணிக்குத் தொடங்கவிருந்த இந்த விற்பனைக்காக, பொதுமக்கள் அதிகாலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இறைச்சிகளுக்கான தேவை மிக அதிகமாக இருந்ததால், ஒரு வாடிக்கையாளருக்கு இரண்டு கோழிகள் மட்டுமே வழங்கப்பட்டன. கோழி இறைச்சி மட்டுமன்றி, சுமார் 1.5 டன் எடை கொண்ட 12 மாடுகளும் பொதுமக்களின் தேவைக்காக அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. 

சந்தையில் 34 முதல் 38 ரிங்கிட் வரை விற்கப்படும் ஒரு கிலோ மாட்டு இறைச்சி, இங்கு வெறும் 24 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது. அதேபோல், கொத்துக்கறி 15 ரிங்கிட்டிற்கும், அரை கிலோ 30 ரிங்கிட்டிற்கும் மலிவு விலையில் கிடைத்தன.

இந்தச் சிறப்பு விற்பனை குறித்துப் பேசிய புக்கிட் காந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சையத் அபு ஹுசின் ஹபீஸ், வரவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு மக்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கிலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். 

பொருட்களை மொத்தமாகக் கொள்முதல் செய்வதன் மூலம் விலையைக் குறைக்க முடிவதாகவும், மக்களின் தேவை அதிகரித்தால் கூடுதல் விநியோகத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

பெருநாள் கால முன்னேற்பாடுகளைச் செய்யும் பொதுமக்களுக்கு இந்த மலிவு விலை விற்பனை பெரும் நிம்மதியை அளித்துள்ளது. "சந்தையை விட இங்கு விலை மிகக் குறைவாக இருப்பதால், நீண்ட வரிசையில் காத்திருந்தது வீண் போகவில்லை" எனப் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset