நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாஹ்பண்டார் மைதானத்தில் பொது மக்களால் விடப்பட்ட 6 டன் குப்பை

கோலா திரெங்கானு: 

இங்குள்ள ஷாஹ்பண்டார் மைதானம், பெசிசிர் பாயாங், 'draw-bridge' பகுதியில் நோன்பு திறப்பதற்காகக் கூடிய மக்களின் உற்சாகம் அந்தப் பகுதியின் அழகை மாசுபடுத்தியுள்ளது.

பொறுப்பற்றச் சிலரின் செயலால், உணவு கழிவுகளும் குப்பைகளும்  மைதானத்தின் ஓரங்களிலும் மேலுமாகக் குவிக்கப்பட்டதால், அந்த இடம் துர்நாற்றம் வீசும் நிலைக்கு மாறியுள்ளது.

 உணவுப்பொட்டலங்களும் குளிர்பானப் புட்டில்களும் மைதானத்தில் மட்டுமின்றி, திரெங்கானு ஆற்றின் வாய்க்கால் நோக்கி இருக்கும் பெஞ்சுகள், படிக்கட்டுகளிலும் விடப்பட்டிருந்தது தெரியவந்தது.

கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ரமலான் மாதத்திலிருந்து, தினமும் குப்பைத் தொட்டிகளுக்கு வெளியே, சுமார் 3 கிலோ எடையுள்ள 50 முதல் 100 கருப்பு பிளாஸ்டிக் பைகள் சேகரிக்கப்படுகின்றன என்று அங்கு சுத்தம் செய்யும் தொழிலாளி கமாருதின் அப்துல் ரஹ்மான் (67) தெரிவித்துள்ளார்.

அவரும் அவரது நண்பர்களும், அந்தப் பகுதியில் விடப்பட்ட குப்பைகளைச் சேகரித்து அகற்ற தினமும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் செலவிடுவதாகத் தெரிவித்தார்.

“வெப்பமான காலநிலை காரணமாகவும், பகலில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க வருவதாலும், மதியத்திற்கு முன்பே சுத்தம் செய்யும் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

“தினமும் அதிகாலை சுப்ஹ் தொழுகைக்குப் பிறகு, குப்பை சேகரிக்கும் பணியைத் தொடங்குவோம். ஏனெனில், இந்த இடம் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பு மையமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

‘போக் டின்’ என அழைக்கப்படும் கமாருதின், பொது விடுமுறை நாட்கள், குறிப்பாக வெள்ளி, சனி நாட்களில் இந்தச் சுற்றுலா பகுதியில் குப்பையின் அளவு இரட்டிப்பாக அதிகரிப்பதாகத் தெரிவித்தார்.

“அந்த நாட்களில், சுத்தம் செய்ய உதவ இரண்டு அல்லது மூன்று கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்,” என்றார்.

அந்தப் பகுதியில் உள்ள பல இடங்களில் தினமும் மூன்று முதல் ஆறு மெட்ரிக் டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன என்று அவரது நண்பர் ரசாலி மமாட் (64) கூறினார்.

சேகரிக்கப்படும் குப்பைகள், குறிப்பாக உணவு பெட்டிகள், பிளாஸ்டிக் பைகளில் அடுக்கப்பட்டு, கம்போங் சுங்கை ஈக்கானில் உள்ள கோலா திரெங்கானு மாநகராட்சி  (MBKT) குப்பை அகற்றும் மையத்துக்கு அனுப்பப்படுகின்றன.

“குப்பைகள் திறந்த வெளியில் மட்டுமின்றி, பூந்தோட்ட மரங்களின் இடைவெளிகளிலும், பெஞ்சுகளின் மேல் கூட வீசப்படுகின்றன.

“குப்பைத் தொட்டிகள் இருந்தும், மக்கள் திட்டமிட்டு குப்பைகளை ஒரே இடத்தில் குவிப்பதே பல இடங்களில் குப்பை குவிய காரணம்,” என்றார் அவர்.

இதற்கிடையில், அந்தப் பொழுதுபோக்கு பகுதியில், MBKT நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகளை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset