நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர் கட்டண வசூல், UKM செலவுகள் முறையாக நிர்வகிக்கப்படவில்லை: கணக்காய்வு துறைத் தலைவர் அறிக்கை

கோலாலம்பூர்: 

2024 நிதியாண்டில் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் (UKM)  மாணவர் கட்டண வசூல், செலவுகள் நிர்வாகத்தில் கடுமையான முறைகேடுகள் ஏற்பட்டுள்ளதாக 2026 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு துறைத் தலைவர் அறிக்கை (LKAN 1/2026) வெளிப்படுத்தியுள்ளது.

 'SPEND' மற்றும் 'DPLI' பாடத்திட்டங்களில் மாணவர்களிடமிருந்து மொத்தமாக RM60.77 மில்லியன் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக 2024 ஆம் ஆண்டுக்கான கூட்டாட்சி முகமை நிதி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதில், UKM நேரடியாக RM2.43 மில்லியன் வசூலித்துள்ளது. RM50.74 மில்லியன் தொகை கூட்டுறவு சங்கம் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், RM7.60 மில்லியன் இன்னும் பெறப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அவ்வறிக்கையின் படி, RM50.74 மில்லியன் கட்டணம் உரிய அனுமதி இன்றி வசூலிக்கப்பட்டதுடன், கூட்டாண்மை ஒப்பந்தங்களுக்கும் நிதியமைச்சரின் அனுமதி பெறப்படவில்லை.

மேலும், RM60.77 மில்லியன் மொத்த கட்டணத்தில் RM32.36 மில்லியன் UKM வருமானமாக பதிவு செய்யப்படவில்லை என்றும் கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கம் வசூலித்த RM50.74 மில்லியனில், RM21.02 மில்லியன் தொகை 31 முதல் 291 நாட்கள் வரை தாமதமாக UKM-க்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், RM5.32 மில்லியன் கட்டணம் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை UKM-க்கு ஒப்படைக்கப்படாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஐந்து UKM அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்ததால் நலன் மோதல் (Conflict of Interest) ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டது.

அதே அறிக்கையில், 'UKMShape' நிறுவனத்தில் சேவை, பொருள் செலவுகளில் மொத்தம் RM57.67 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும், அதில் RM6.69 மில்லியன் முறையற்றச் செலவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தகுதி இல்லாத முகவர்களுக்கு RM5.94 மில்லியன் கமிஷன் வழங்கப்பட்டுள்ளதாகக் கணக்காய்வு கண்டறிந்துள்ளது.

UKM, அதன் ஊழியர்கள் அல்லாத ஆறு நபர்களுக்கு வெளிநாட்டு பயணச் செலவாக RM107,907 செலவிட்டதும் தெரியவந்துள்ளது.

அத்துடன், தகுதி இல்லாத மாணவர்களுக்கு RM35,000 தொழிற்பயிற்சி உதவித்தொகை வழங்கப்பட்டதும், அனுமதி பெறப்படாத சிறப்பு திட்டங்களுக்கு RM200,000 முன்பணம் வழங்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதன் அடிப்படையில், UKM-இல் மாணவர் கட்டண வசூல் மற்றும் செலவுகளில் கடுமையான முறைகேடுகளும் நிர்வாக விதிமீறல்களும் உள்ளதாக கணக்காய்வு முடிவு செய்துள்ளது. இவை சட்ட, நிதி விதிமுறைகளுக்கு முரணானவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கூட்டுறவு சங்கம் மூலம் வசூலிக்கப்படும் மாணவர் கட்டணங்கள் ஒப்பந்த விதிகளின்படி UKM-க்கு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா என்பது  கண்காணிக்கபட வேண்டும், நிலுவையில் உள்ள கட்டணங்களை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய, எதிர்கால ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும், UKM அரசியலமைப்பு விதிகளுக்கு ஏற்ப ஒப்பந்தங்கள் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset