நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலானுக்கு முந்தைய நாளில் ஐந்து வீடுகள் தீயில் சாம்பல்

கோத்தா கினபாலு: 

இஸ்லாமியர்கள் நேற்று இரவு முதல் தராவீஹ் சிறப்பு தொழுகையைத் தொடங்கியுள்ள நிலையில் கம்போங் தஞ்சூங் அரு பாரு பகுதியில் உள்ள ஐந்து வீடுகள் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.

ஒரு காலத்தில் தங்களுக்குத் தங்குமிடமாக இருந்த வீடுகள் தீயால் சாம்பலாக மாறியதைப் பாதிக்கப்பட்டவர்கள் கண்களில் கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்த ஆண்டு ரமலான் தங்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத துயரத்துடன் வந்துள்ளதாக 42 வயதான தனித்து வாழும் தாய் சாடியா அப்துல்லாஹ் தெரிவித்தார்.

தீ விபத்து நடந்த போது அவர் கோத்தா கினபாலுவில் பாதுகாப்புப் பணியாளராகப் பணியில் இருந்ததாகவும், அப்போது தனது 15 வயது மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் கூறினார்.

“அப்போது என் நான்கு பிள்ளைகளும் வீட்டில் இருந்தார்கள். நான் வந்து சேர்ந்தபோது வீடு முழுவதும் எரிந்து போயிருந்தது. எதுவும் எஞ்சவில்லை. சில ஆவணங்களும், சில உடைகளும் மட்டுமே மீதமிருந்தன,” என்று கண்ணீரை அடக்கிக்கொண்டு கூறினார்.

தற்போது சாடியா தனது 12 முதல் 15 வயதுக்குள் உள்ள நான்கு பிள்ளைகளுடன், தற்காலிகமாகத் தஞ்சூங் அரு கிராம மண்டபத்தில் தங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மற்றொருவரான 39 வயது பஸ்ரி நாசிர், வேலை முடித்து ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது, மக்கள் கூச்சல் கேட்டு வெளியே வந்ததாகத் தெரிவித்தார்.

“வெளியேறுவதற்கு முன் சில ஆவணங்களையும் சில உடைகளையும் மட்டும் எடுத்துக்கொள்ள முடிந்தது. சஹூருக்கான அனைத்து ஏற்பாடுகளும், சமையலறை உபகரணங்களும் தீயில் எரிந்து போயின,” என்று கூறினார்.

இதற்கிடையில், சபா தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டு அதிகாரி ஹன்னிஸ் முக்தார், பிற்பகல் 2.54 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து கோத்தா கினபாலு தீயணைப்பு நிலையத்திலிருந்து 23 வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை,” என்றும் அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset