நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீனவர்களாக நடித்து, இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது

ஷா ஆலம்:

மலேசிய தீபகற்பத்திலிருந்து சிலாங்கூர் கடல்வழியாக போதைப்பொருள்களை எடுத்துச் சென்று, நடுக்கடலில் கப்பல்களுக்கு மாற்றி இந்தோனேசியாவுக்கு கடத்தி வந்த நடவடிக்கை, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி செகின்ச்சான், சபாக் பெர்னாம் பகுதியில் நடைபெற்ற சோதனை நடவடிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்த ‘ஒப் டாபிஸ்’ நடவடிக்கை, சபாக் பெர்னாம் மாவட்ட காவல் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்ற விசாரணைப் பிரிவு (BSJN) மூலம் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூன்று இந்தோனேசியர்கள் (இரண்டு ஆண்கள், ஒரு பெண்) 26 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள் என புக்கிட் அமான் போதைப்பொருள் குற்ற விசாரணைத் துறை (JSJN) இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமர் கான் தெரிவித்தார்.

11.36 கிராம் எடையுள்ள மெத்தாம்பெட்டமின் என சந்தேகிக்கப்படும் மூன்று பிளாஸ்டிக் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

“இரண்டாவது சோதனை நடவடிக்கையில், மீன் பிடிக்கும் துறையில் நிறுத்தப்பட்ட எண் இல்லாத ஒரு படகில், சுமார் 158.61 கிலோ மெத்தாம்பெட்டமின் கொண்ட 152 மூட்டைகள், 10.89 கிலோ எடையுள்ள எக்ஸ்டசி போதைப்பொருள், MDMA கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் 2,000 கார்ட்ரிட்ஜ்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மொத்த மதிப்பு சுமார் RM12.6 மில்லியன் ஆகும்,” என அவர் சிலாங்கூர் மாநில காவல் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முதல் சந்தேகநபர் கடல், நில வழி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர என்றும் இரண்டாவது சந்தேகநபர் ‘ரன்னர்’, ‘படகோட்டி’ ஆக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கும்பல் 2021 முதல் செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மூன்றாவது சந்தேகநபர், முதல் சந்தேகநபரின் மனைவி ஆவார். இரு ஆண் சந்தேகநபர்களும் மீனவர்களாக பணியாற்றியதாகவும், எந்த சட்டபூர்வ ஆவணங்களும் இல்லாமல் மலேசியாவில் தங்கியிருந்ததாகவும், பெண் சந்தேகநபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே வந்ததாகவும் கூறினார்.

மூவரும் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்மீது ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952, பிரிவு 39Bன் கீழ் விசாரணை நடைபெறுகிறது.

மேலும், 1988 ஆம் ஆண்டு போதைப்பொருள் சட்டத்தின் சொத்து பறிமுதல் விதிகளின் கீழ் RM49,000 மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 421,000 இந்தோனேசிய ரூப்பியா ரொக்கம், மூன்று மோதிரங்கள், கழுத்துச் சங்கிலி, கைச் சங்கிலி, வளையல், காதணிகள , மூன்று மோட்டார் சைக்கிள்கள் அடங்கும்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் காவல்துறை எந்தச் சமரசமும் செய்யாது என்றும், இத்தகைய குற்றங்கள் நாட்டின் பாதுகாப்பையும் மரியாதையையும் பாதிக்கும் என்றும் ஹுசேன் ஓமர் கான் வலியுறுத்தினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset