நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பணமும் பழிவாங்கலும்: பெண் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்

கோத்தா கினபாலு:

'Indah Permai' பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் வீசப்பட்ட பெண்ணின் சடலம் சம்பந்தப்பட்ட கொலை வழக்கில், முக்கியச் சந்தேகநபர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். தனிப்பட்ட உறவு தகராறு, நிச்சயதார்த்த பணம் தொடர்பான பிரச்சினையால் இக்கொலை சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

71 வயதுடைய அந்தச் சந்தேக நபரைக் கைது செய்து மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் போது இந்த ஒப்புதல் பெறப்பட்டதாகக் கோத்தா கினபாலு மாவட்ட இடைக்கால காவல் கண்காணிப்பாளர் சையத் லாட் சையத் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

“சந்தேகநபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் இடையேயான தனிப்பட்ட உறவு முரண்பாடு, நிச்சயதார்த்தம் முறிந்ததையடுத்து பணம் திருப்பிக் கேட்கப்பட்ட விவகாரம் இந்தக் கொலைக்கு காரணமாக இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மற்றொரு நபரை திருமணம் செய்துகொண்டதால், இவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்தது,” என்று அவர் செய்தியாளர் அறிக்கையில் கூறினார்.

மேலும், விசாரணை ஆவணங்களை முழுமைப்படுத்த கூடுதல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சாட்சிகளின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண் பயத்துடன் ஒரு வீட்டிலிருந்து வெளியே ஓடிய நிலையில் காணப்பட்டதாகவும், பின்னர் ஒரு ஆண் அவரை மீண்டும் உள்ளே இழுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விசாரணைக்கு முக்கிய தடயமாக அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு 8.10 மணியளவில், போலீசார் சந்தேகநபரை 'Queen Elizabeth II' மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் கைது செய்துள்ளனர்.

மேலும், இரவு 10.30 மணியளவில், சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 19 வயதுடைய உள்ளூர் இளைஞர் ஒருவரை செப்பங்கார் பகுதியில் உள்ள 'Taman Seri Maju' அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, கைப்பேசி, சம்பவத்தின் போது அணிந்ததாக நம்பப்படும் உடைகள் மற்றும் தங்க நிற நிசான் எக்ஸ்-ட்ரெயில் வாகனம் உள்ளிட்ட சில பொருட்களும் தடயவியல் ஆய்வுக்காகக் கைப்பற்றப்பட்டன.

இரு சந்தேகநபர்களும் தற்போது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் (கொலை குற்றம்) விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று, சுமார் 40 வயதுடைய பெண்ணின் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், 'Indah Permai' சுற்றுவட்டார குப்பை வீசும் இடங்களில் தனித்தனியாக கண்டெடுக்கப்பட்டன.

காலை 6.30 மணியளவில் முதலில் கை, கால் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலில், காலை 11.40 மணியளவில் அருகிலுள்ள பகுதியில் தலையும் உடலும் கண்டெடுக்கப்பட்டன.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset