நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செத்தியா ஆலாமில் சடலங்கள் கண்டெடுப்பு: குற்றம் தொடர்பான ஆதாரம் இல்லை என போலீசார் தகவல்

ஷா ஆலம்:

செக்க்ஷன் U13, செத்தியா ஆலாமில் உள்ள ஒரு வீட்டில் ஆண், பெண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டச் சம்பவத்தில் குற்றச் செயல் எதுவும் இல்லை என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அப்பெண்னின் குடும்ப உறுப்பினரான ஆடவர் ஒருவர் தனது சகோதரியின் வாடகை வீட்டில் அந்த இருவரின் சடலங்களைக் கண்டதாகப் போலீசில் புகார் அளித்ததாக ஷா ஆலம் மாவட்ட காவல் துறை தலைவர், உதவி ஆணையர் ராம்சே எம்போல் தெரிவித்துள்ளார்.

“ஆரம்பகட்ட விசாரணையில், சிலாங்கூர் மாநில காவல் தலைமையகத்தின் (IPK) தடயவியல் (Forensic) குழுவுடன் இணைந்து நடத்திய ஆய்வில், அந்த வீடு மூடப்பட்டிருந்ததும், வெளியில் வாகனங்கள் இல்லாததும், முன்பக்க இரும்புக் கதவு பூட்டப்படாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இரு சடலங்களும் வீட்டின் கீழ்பகுதியில் உள்ள ஒரு அறையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. குற்றச் சம்பவம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாத வகையில் அந்த வீடு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது.

"மேலும், இருவரின் உடலிலும் எந்தவிதமான காயங்களும் காணப்படவில்லை,” என அவர் நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இரு சடலங்களும் உடற்கூறு பரிசோதனைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு அனுப்பப்படும் என்று ராம்சே கூறினார்.

“தற்போது இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை கோப்பு செக்க்ஷன் 6, ஷா ஆலம் காவல் நிலையத் தலைவர் பொறுப்பில் வழங்கப்படும்.

மேலும் தகவல் உள்ளவர்கள் விசாரணை அதிகாரி, செக்க்ஷன் 6 காவல் நிலைய தலைவர், இன்ஸ்பெக்டர் இஸ்மான் மொஹ்த் இட்ருஸை 013-4003355 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்,” என்றார் அவர்.

இதற்கிடையில், அண்டை வீட்டில் வசிக்கும் 31 வயதான இமான் என்பவர், அந்த தம்பதியர் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் அடிக்கடி சண்டையிடுவார்கள். சில நேரங்களில் வீட்டுக்கு வெளியிலும், சில நேரங்களில் உள்ளேயும் இரவும் பகலும் சத்தமாகவே இருக்கும். ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த சண்டைகள் நின்றுவிட்டன.

அதனால், அவர்கள் வீட்டை மாற்றிவிட்டார்களோ அல்லது யாராவது புகார் அளித்ததால் வெளியேறிவிட்டார்களோ என்று நாங்கள் நினைத்தோம்,” என்றார் அவர்.

மேலும், சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி துர்நாற்றம் வீசியதாக தெரிவித்தாக அந்த ஆடவர் கூறினார்.

“மூன்று நாட்களுக்கு முன்பு, என் மனைவி துணி துவைத்துக் கொண்டிருந்தபோது துர்நாற்றம் வந்தது. அப்போது, ஒரு பூனை இறந்திருக்கலாம் என்று நினைத்தோம். வீட்டுக்குள் சடலங்கள் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை,” என்றார்.

பின்னர் போலீசார் வந்தபோது தான் உண்மை தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.

“நான் வீட்டிற்கு வந்தபோது, போலீசார் ஏற்கனவே இங்கே இருந்தனர். அண்டை வீட்டாரிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் என்னிடம் கேட்டபோது, எனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறினேன்,” என்று மேலும் பேசிய அவர் தெரிவித்தார்.

- சங்கீர்த்தனா

 

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset