நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள அமைச்சின் கீழ் மித்ரா; தர்ம மடானி திட்டத்தின் கீழ் 155 ஆலயங்களுக்கு 3.1 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா:

மித்ராவின் தர்ம மடானி திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 155 ஆலயங்களுக்கு 3.1 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

நாடு முழுவதும் உள்ள 1,000 பதிவு பெற்ற இந்துக் கோவில்களுக்கு 20 மில்லியன்  ரிங்கிட் தர்ம மடானி ஒரு முறை நிதியுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தின் வாயிலாக, தகுதியுள்ள ஒவ்வொரு ஆலயமும் தலா 20,000 ரிங்கிட்  நிதியுதவியைப் பெறும்.

இந்து சமய நிறுவனங்களை வலுப்படுத்தும் ஒரு செயல் திட்டமாக மித்ராவின் நேரடி மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்திருந்த ஆலயத் தலைவர்கள், நிர்வாகப் பிரதிநிதிகளிடம், மித்ராவின் முதற்கட்ட தர்ம மடானி’ல் திட்டத்திற்கான அங்கீகாரக் கடிதம் வழங்கப்பட்டது.

தர்ம மடானி திட்டத்தின் முதற்கட்ட அமலாக்கத்தில் மொத்தம் 155 ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு ஆலயத்திற்கும் தலா 20,0000 ரிங்கிட் வீதம், ஒட்டு மொத்தமாக 3.1 மில்லியன் ரிங்கிட்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தர்ம மடானி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்குதல், அங்கீகரிக்கும் நடைமுறைகள் பல்வேறு கட்டங்களாகவும், நிலை வாரியாகவும் முன்னெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பயனாளிகளின் விவரங்கள் அவ்வப்போது மித்ராவின் (www.mitra.gov.my) வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்றார்.

மேலும் 2026 ஜனவரி 14ஆம் தேதி அன்று நடைபெற்ற அமைச்சரகைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவின் அடிப்படையில் மித்ரா, பிரதமர் துறையிலிருந்து மனிதவள அமைச்சுக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவித்தார்.

மடானி அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு இலக்குகளுக்கு இணங்க, இந்தியச் சமூகத்திற்கான திட்டமிடல், செயலாக்கம்,  கண்காணிப்பு ஆகியவற்றை முறையான கட்டமைப்புடனும், ஒருமுகப்படுத்தப்பட்ட செயல்பாட்டுடனும், மிகுந்த பயனுறுதியுடனும் முன்னெடுப்பதை உறுதி செய்வதே இந்தத் துறை மாற்றத்தின் அடிப்படை நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset