நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்புப் பெருநாளுக்கு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை தளர்வு வழங்க முதலாளிகளை மனிதவள அமைச்சு ஊக்குவிக்கிறது

புத்ராஜெயா:

மலேசிய மக்களுக்கு ஓர் அங்கீகாரமாக, நோன்புப் பெருநாளை முன்னிட்டு கூடுதல் விடுமுறை அளிக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை மனிதவள அமைச்சு வரவேற்கிறது.

அந்த அறிவிப்பின் அடிப்படையில், நேன்புப் பெருநாள்  மார்ச் 20, வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்பட்டால், அரசாங்கம் மார்ச் 23, திங்கட்கிழமையை கூடுதல் பொது விடுமுறையாக அறிவிக்கும், அல்லது நோன்புப் பெருநாள்  சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்பட்டால் மார்ச் 20, வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும்.

இந்த நடவடிக்கை மலேசியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கும், குடும்பத்தினருடன் நோன்புப் பெருநாளை  மிகவும் வசதியாகக் கொண்டாடுவதற்கும் வாய்ப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த கூடுதல் விடுமுறையானது, பொது விடுமுறையை அறிவிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கும் 1951 ஆம் ஆண்டு விடுமுறைச் சட்டம் [சட்டம் 369]-இன் கீழ் உள்ள விதிகளுக்கு இணங்க உள்ளது. அதன்படி, அறிவிக்கப்பட்ட இந்த விடுமுறை 1955 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புச் சட்டம் [சட்டம் 265], பிரிவு 60D-இன் கீழ் தனியார் துறை ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொது விடுமுறையாகும்.

அந்த விதியின் அடிப்படையில், முதலாளிகள் இந்த பொது விடுமுறைக்கு பதிலாக வேறு எந்த நாளையாவது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாக மாற்றிக் கொடுக்கலாம்.

இந்த கூடுதல் விடுமுறை ஏற்பாடு அறிவிக்கப்பட்ட தேதியிலேயே வழங்கப்படுகிறதா அல்லது பொருத்தமான வேறு நாளில் மாற்றப்படுகிறதா என்பது குறித்து முதலாளிகள் ஊழியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

ஒருவேளை ஊழியர்கள் அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை நாளில் வேலை செய்ய வேண்டியிருந்தால், அந்த ஊழியர் 1955 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பொது விடுமுறைக்கான ஊதிய விகிதத்தைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.

எனவே, அக்கறையுள்ள வேலைவாய்ப்பு நடைமுறையின் ஒரு பகுதியாகவும், வேலை-வாழ்க்கை சமநிலையை ஆதரிக்கும் விதமாகவும் ஊழியர்களுக்கு விடுமுறை தளர்வு வழங்குவதைக் கருத்தில் கொள்ளுமாறு முதலாளிகளை மனிதவள அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

இந்த நடவடிக்கை ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமை, நல்வாழ்வு மற்றும் நல்லிணக்க சூழலில் நோன்புப் பெருநாளைக் கொண்டாட இடமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோன்புப் பெருநாள் போன்ற பண்டிகை கொண்டாட்டங்கள் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் இருப்பதற்கான மிக அர்த்தமுள்ள நேரம் என்று மனிதவள அமைச்சு கருதுகிறது. 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset