நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய எல்லைப் பாதுகாப்பு முகமையின் அதிரடி சோதனை: மானிய விலை எரிபொருளை கடத்தாமல் இருக்க 24 மணிநேரக் கண்காணிப்பு

ரந்தாவ் பஞ்சாங்:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தொடர்ந்து, மலேசியாவின் ரந்தாவ் பஞ்சாங் எல்லைக் கட்டுப்பாட்டு வளாகத்தில் வாகனச் சோதனைகளை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை (AKPS) தீவிரப்படுத்தியுள்ளது.

உலகளாவிய எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி, மலேசியாவின் பெட்ரோல்,  டீசலை அண்டை நாடுகளுக்குக் கடத்த முயலும் முயற்சிகளைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இது குறித்து ரந்தாவ் பஞ்சாங் எல்லைப் பாதுகாப்புத் துணைத் தளபதி பக்ரி சுலைமான் கூறுகையில், தற்போதைய சூழலில் எரிபொருள், பிற அத்தியாவசியக் கட்டுப்பாட்டுப் பொருட்களைக் கடத்தக் கும்பல்கள் முற்படலாம் என்பதால், தனியார் கார்கள் உட்பட அனைத்து வகையான வாகனங்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். 

இதற்காக எல்லைப் பாதுகாப்புப் படையினருக்குத் தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மேலும், கிளாந்தான் மாநிலத்தின் பிற எல்லைப் பாதுகாப்பு முகமைகளும் தாய்லாந்து எல்லை வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களைத் தவிர்க்கத் தயார் நிலையில் இருக்குமாறு

அறிவுறுத்தப்பட்டுள்ளன. 
உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு, மானிய விலையிலான RON95 பெட்ரோல் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்க எல்லையோரப் பகுதிகளில் 24 மணிநேரத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset