நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா: வெனிசுலாவில் அடுத்தடுத்து 7 வெடிப்புச் சம்பவங்கள்

கராகஸ்: 

வெனிசுலா தலைநகர் கராகஸில் இன்று (ஜன.3) அதிகாலை 7 இடங்களில் அடுத்தடுத்து வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

இவை வெனிசுலா ராணுவ தளங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. 

பயங்கர சத்தத்துடன் கரும்புகை கிளம்பியதால் பொதுமக்கள் அச்சமடைந்ததாகத் தகவல்கள் வருகின்றன. 

மேலும், அப்பகுதியில் விமானம் ஒன்று தாழப் பறந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அது போர் விமானம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதலுக்கு ஆயத்தமாகி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், இந்தத் தாக்குதலை அமெரிக்காவே நடத்தியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் கணிக்கின்றன.

இருப்பினும், வெனிசுலா தலைநகரில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவங்கள் குறித்து அந்நாட்டு ராணுவமோ அல்லது அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனோ எதுவும் சொல்லவில்லை.

ட்ரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து... - முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவை பதவி விலகுமாறு பலமுறை எச்சரித்து வந்தார். 

அமெரிக்காவுக்குள் ஃபெண்டானில் போதைப் பொருள் ஊடுருவ வெனிசுலா அதிபரே காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகிறார். 

அமெரிக்கா மீது வெனிசுலா ‘போதைப் பொருள் பயங்கரவாதம்’ நிகழ்த்துவதாகக் குற்றஞ்சாட்டி வருகிறார். 

மேலும், வெனிசுலாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்ததோடு, அதன் கடற்பரப்புக்குள் எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்தையும் முடக்கிவைத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் ரோந்து, கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபடுவதோடு, சில போர்க் கப்பல்களும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் இன்று காலை நிகழ்ந்துள்ள தாக்குதல்கள் அனைத்தும் அமெரிக்கா மீதான சந்தேகத்தை வலுக்கச் செய்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset