நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எல்லைச் சுவருக்காக மக்களின் வீடுகள் பறிப்பு: ட்ரம்ப் அரசின் அதிரடி முடிவு

லாரெடோ: 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், நெய்டா அல்வாரெஸ் என்பவருக்கு, அமெரிக்கா–மெக்சிகோ எல்லைச் சுவர் தனது வீட்டுப் பின்வாசல் வழியாக செல்ல அனுமதிக்கலாமா என்பதை முடிவு செய்ய ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. அவர் மறுத்தால், டெக்சாஸ் மாநிலம், ரியோ கிராண்டே ஆற்றங்கரையில் உள்ள அவரது வீட்டை அரசு கைப்பற்றிவிடும் என அவர் கூறினார்.

ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுப்பதும், ஏற்கனவே உள்ளவர்களை நாடு கடத்துவதும் ட்ரம்பின் முக்கிய அரசியல் இலக்காக இருந்து வந்தது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மெக்சிகோ எல்லையை மேலும் கடுமையாக மூடும் திட்டங்கள் உட்பட “அமெரிக்கர்களே முதலில்” என்ற அவரது உள்நோக்கிய கொள்கையின் முக்கிய பகுதியாகும். இது குறித்து அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.

தற்போது, டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டெக்சாஸின் லாரெடோ சுற்றுவட்டாரப் பகுதிகள் குறிவைக்கப்பட்டுள்ளன. மெக்சிகோ எல்லையாக விளங்கும் ரியோ கிராண்டே ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரத்தில் சுமார் 2.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

இந்த ஆற்றங்கரையில் வீடுகள், பூங்காக்கள், நடைபாதைகள், மீன்பிடி பகுதிகள், கல்லறைகள் கூட உள்ளன. தற்போது அங்கு எந்தச் சுவரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம், குறைந்தது 60 வீட்டு உரிமையாளர்களுக்கு, “எல்லை தடுப்பு சுவர் கட்டுமானத் திட்டத்திற்கு அருகிலுள்ள சொத்து குறித்த அறிவிப்பு” என்ற தலைப்பில் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

“இது பெரும் நில அபகரிப்பு முயற்சியாகும். ட்ரம்ப் நிர்வாகம், சுமார் 3,000 கி.மீ நீளமான மெக்சிகோ எல்லையில், இன்னும் வேலி இல்லாத பகுதிகளில் “ஸ்மார்ட் சுவர்” அமைக்க திட்டமிட்டுள்ளது," என்று ரியோ கிராண்டே சர்வதேச ஆய்வு மையத்தின் செயற்பாட்டாளர் எட்கர் வில்லாசெனோர் தெரிவித்துள்ளார்.

முதல் ஆட்சிக் காலத்திலும் ட்ரம்ப் சுவர் கட்டியிருந்தார். 2025 ஜனவரியில் இரண்டாவது முறையாக பதவியேற்கும் போது, எல்லையின் மூன்றில் ஒரு பகுதி ஏற்கனவே தடுப்புச்சுவரால் பாதுகாக்கப்பட்டிருந்தது.

புதிய திட்டத்தின் படி, சில இடங்களில் சுவர், சில இடங்களில் நீர்தடுப்பு, கண்காணிப்பு சாலைகள், தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்படும்.

“சுவர் என் வீட்டுப் பின்வாசலில் வரும்,” என லா ரோசிட்டாவில் வசிக்கும் 54 வயது ஆசிரியையான அல்வாரெஸ் கூறினார்.

அவருக்கு வந்த கடிதத்தில், அரசு US$1,000 வழங்கி பின்வாசலில் கட்ட அனுமதிக்கலாம் அல்லது வீட்டையோ, பின்வாசல் உரிமையையோ அரசுக்கு விற்கலாம் என கூறப்பட்டுள்ளது. இரண்டையும் செய்யாவிட்டால், அரசு ‘எமினெண்ட் டொமைன்’ என்ற சட்ட உரிமையைப்  பயன்படுத்தி சொத்தை கைப்பற்றும்.

“ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தை அல்லது கைப்பற்றல் — மூன்றில் ஒன்று தான்,” என அவர் தெரிவித்தார்.

“ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற முதல் ஆண்டிலேயே, அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பாதுகாப்பான எல்லையை உருவாக்கியுள்ளோம்,” என உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கிரிஸ்டி நோயம் தெரிவித்தார்.

எல்லை நகரமான 'Eagle Pass' பகுதியில் 2024 ஜனவரியில் படைகள் நிறுத்தப்பட்டன. ஆற்றில் பெரிய மிதக்கும் தடுப்புகள், கம்பித் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இதனால், 65 வயதான ஜெஸ்சி ஃபுவென்டஸின் கயாக் சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டது.

“அவர்கள் பாதுகாப்பை மட்டுமே பார்க்கிறார்கள்; சுற்றுச்சூழல் பாதிப்பை கவனிக்கவில்லை,” என்றார் அவர்.

மேலும், சட்டவிரோதமாக நுழைவோர் குற்றவாளிகள் என்ற குற்றச்சாட்டு தவறானது என்று வில்லாசெனோர் கூறியுள்ளார்.
“சுவர் தேவையே இல்லை. இதைச் சொல்பவர்கள் வாஷிங்டன் டி.சியில் இருப்பவர்கள். ஆற்றங்கரையில் வாழ்பவர்கள் யாருக்கும் பயமில்லை,” என்றார் அவர்.

- AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset