நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: இஸ்ரேல் அமைச்சர் மிரட்டல்

பெய்துல்மக்திஸ்: 

பாலஸ்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால், விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேலிய நிதியமைச்சரான பெசலேல் ஸ்மோட்ரிச் எச்சரித்துளார்.

எதிர்வரும் சில நாட்களில் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை வழங்கப்படும். அவர்கள் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைத்து, காசா பகுதியிலிருந்து அனைத்து படைகளையும் விலக்கிக் கொள்ள வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது.

அமெரிக்காவின் ஆதரவுடன் ஏற்பட்ட முதல் கட்ட போர்நிறுத்தம், இரண்டு ஆண்டுகளாக நீடித்த போரை நிறுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, இஸ்ரேல் படைகள் ‘மஞ்சள் கோடு’ என அழைக்கப்படும் எல்லைக்கு பின்னால் பின்வாங்கின. எனினும், இஸ்ரேல் இன்னும் காசாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸும் இஸ்ரேலும் தினசரி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலின் நடவடிக்கைகளால் 615 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல் வெளியிட்டுள்ளது.

அதே காலகட்டத்தில், ஐந்து இஸ்ரேலிய படைவீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

“ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால், சர்வதேச ஆதரவும் அமெரிக்காவின் துணையும் கொண்டு, இஸ்ரேல் ராணுவம் தனியாகவே நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது. இதற்கான திட்டங்களும் தயார் நிலையில் உள்ளன,” என்றார் அவர்.

கடந்த மாதம் தொடங்கிய இரண்டாம் கட்ட போர்நிறுத்தம், இஸ்ரேலிய படைகள் படிப்படியாக பின்வாங்குவதையும், ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைப்பதையும் உள்ளடக்கியது. இருப்பினும், ஹமாஸ் இதனை கடுமையாக எதிர்க்கிறது.

“ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால், இஸ்ரேல் படைகள் கண்டிப்பாக காசாவுக்குள் நுழைந்து அதை கைப்பற்றும்,” என ஸ்மோட்ரிச் தெரிவித்தார்.

நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு, “தற்போது இரண்டு அல்லது மூன்று மாற்றுத் திட்டங்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்,” என்றார் அவர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதி திட்டத்தில், 20,000 வீரர்களைக் கொண்ட ‘சர்வதேச நிலைநாட்டும் படை (ISF)’ அமைப்பை உருவாக்குவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சில நாடுகள் ஏற்கனவே தங்கள் படைகளை அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளன.

நேற்று, வடக்கு பகுதியில் உள்ள பீட் லாஹியா மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தியது.
மேலும், தெற்கில் உள்ள கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலின் இரண்டு வான்வழித் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று, ‘மஞ்சள் கோடு’ எல்லையைக் கடந்து இஸ்ரேல் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்த ஒரு போராளியைத் தங்களது படைகள் ‘அழித்துவிட்டதாக’ இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

— AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset