நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கலீதா ஜியா மறைவுக்கு வங்கதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்: தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் அறிவிப்பு 

டாக்கா: 

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா மறைவை அடுத்து, மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

கலீதா ஜியாவின் மறைவை அடுத்து முகமது யூனுஸ், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், ‘‘இன்று நாட்டுக்கு மிகவும் துயரமான நாள். நாட்டின் ஜனநாயக அரசியலின் முன்னணி ஆளுமையாக விளங்கிய கலீதா ஜியா இன்று நம்மிடம் இல்லை. ஜனநாயகம், பல கட்சி அரசியல் கலாச்சாரம், மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்டம் ஆகியவற்றில் அவரது அசாதாரண பங்கு வரலாற்றில் நிலைத்திருக்கும்.

தேசத்தின் இந்த கடினமான காலத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த துக்க தருணத்தைப் பயன்படுத்தி யாரும் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கவோ, நாசகாரச் செயல்களில் ஈடுபடவோ அனுமதிக்காதபடி அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும். அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் நாளைய தினம் (டிச. 31) பொது விடுமுறை என அறிவிக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

கலீதா ஜியா மறைவு: கலீதா ஜியா இன்று (டிச. 30) அதிகாலை காலமானார். நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டாக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்ததாக அவரது கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset