நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கும்பாபிஷேக விழாவில் வெளிநாட்டு குருக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டம்; மஹிமா உடன்படாது: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

கும்பாபிஷேக விழாவில் வெளிநாட்டு குருக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்துடன் மஹிமா உடன்படாது.

மஹிமா தேசியத் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

பேரா மாநிலத்தில் உள்ள ஆலயங்கள் கும்பாபிஷேக விழாவை நடத்துவதற்கு மலேசியாவிலிருந்து குருக்களை பணியமர்த்த வேண்டும்.

இதில் வெளிநாட்டு குருக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த வேண்டும் என பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் கூறியுள்ளார்.

இந்த திட்டத்துடன் மஹிமா உடன்படவில்லை.

உள்ளூர் மனிதவளத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நல்ல நோக்கங்களை நான் பாராட்டுகிறேன்.

ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு மாறானது. மிக முக்கியமான, பெரிய விழாவின் சுமூகமான நடத்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மலேசியாவில் உள்ள ஆலயங்கள் மலேசிய குருக்களுடைய ஈடுபாட்டை ஒருபோதும் தடுத்ததில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

உண்மையில், ஒவ்வொரு மத விழாவிலும் சடங்குகளிலும் அவர்கள் ஈடுபடுவதை நான் ஊக்குவிக்கிறேன்.

இருப்பினும் ஆலய பூஜைகள் உட்பட பெரிய கும்பாபிஷேக விழாவை நடத்துவதில் உண்மையிலேயே அனுபவம் வாய்ந்த திறமையான உள்ளூர் குருக்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது.

அதிக தகுதி வாய்ந்த குருக்களுடைய உற்பத்தி திறன் நீண்ட நேரம் எடுக்கும்.

மேலும் இந்த குறுகிய காலத்தில், நாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய அவர்களின் எண்ணிக்கை இன்னும் போதுமானதாக இல்லை.

மேலும் சிவநேசன் வழங்கிய முன்மொழிவைக் கேட்ட பிறகு எனது கேள்வி என்னவென்றால், கோயிலே பணியமர்த்தப்படும் எந்தவொரு கும்பாபிஷேக விழாவிலும் குருக்களின் விவகாரத்திற்கு இடைத்தரகராக குருக்கள் சங்கம் போன்ற மூன்றாம் தரப்பினரின் ஈடுபாடு ஏன் அவசியம்?.

இது பொருத்தமானதல்ல. காரணம் அதை ஏற்பாடு செய்வதற்கான செலவுகளை ஆலயங்களே முழுமையாக ஏற்கின்றன.

எனவே, ஆலய நிர்வாகத்தில் மூன்றாம் தரப்பினரின் தேவை என்ன?. அதை ஆலய நிர்வாகமே  செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கை ஆலயத்திற்கு நிதி ரீதியாக எந்தப் பயனும் இல்லாமல் எந்த தெளிவான பலனும் இல்லாமல் சுமையை ஏற்படுத்தும்.

ஆகவே இது போன்ற திட்டங்களை முன்மொழிவதற்கு முன் சம்பந்தப்பட்ட ஆட்சிக் குழு உறுப்பினர் இது குறித்து முழுமையான ஆய்வுகளை நடத்த வேண்டும் என டத்தோ சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset