நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

13ஆவது மலேசியத் திட்டம்: இந்திய சமூகத்திற்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் : புனிதன்

கோலாலம்பூர், ஜூலை 15:
13வது மலேசியத் திட்டம் (RMK13) உருவாக்கப்படும் இந்த கட்டத்தில், மலேசியா இந்தியர்கள் மீதான நீண்டகால புறக்கணிப்பு நிறைவுக்கு வரவேண்டும் என மலேசியா இந்திய மக்கள் கட்சி (MIPP) தலைவர் பி. புனிதன் வலியுறுத்தியுள்ளார்.

 மலேசியாவின் கட்டுமானம், உழைப்புத் தொழில்கள், கல்வி மற்றும் பொதுமக்கள் சேவைகளில் இந்திய சமூகத்தின் பங்களிப்பு மறுக்க முடியாத ஒன்று. இருப்பினும், அவர்கள் பங்களிப்புகள் சரிவர அங்கீகரிக்கப்படாமல், அரசின் தேசிய வளர்ச்சி திட்டங்களில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என அவர் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

கல்வி முக்கிய மாற்றக் கருவியாகும் என்பதனால், இந்திய மாணவர்களுக்கு மேற்படிப்பு, அரசு உதவித்தொகைகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் நியாயமான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியம். குறிப்பாக, மெட்ரிகுலேஷன் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் நிரந்தர இடங்கள் அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், இந்திய சமூகத்திற்குள் நிலவும் நகர்ப்புற வறுமை, வேலைவாய்ப்பு குறைபாடுகள் மற்றும் சமூக பாதிப்புகளை சமாளிக்க, இலவச வீடமைப்பு, மருத்துவ வசதிகள் மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் தேவையாக உள்ளன. அரசு நிர்வாகம் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் இந்தியர்களின் பங்கேற்பும் மிகக் குறைவாக உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒன்றுபட்ட அரசுக்கு இந்த கோரிக்கைகள் புதியதல்ல என்றும், பல ஆண்டுகளாக “சமத்துவம், பங்குபற்றுதல், முன்னேற்றம்” எனும் தலைப்புகளில் சொல்வாக்கு இருந்தாலும், நிகழ்த்தப்பட்ட மாற்றம் வெகுவாக இல்லை என்றும் புனிதன் சாடினார்.

இதே சமயம், இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 நாடாளூமன்ற உறுப்பினர்கள்,  மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் செயல்படாமல், ஒருங்கிணைந்த முயற்சியுடன் உறுதியான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“இந்தியர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டியதில்லை. நியாயமும் சமத்துவமும் தான் எங்கள் கோரிக்கை. RMK13 வெறும் ஆவணமாக இருக்கக்கூடாது; அது ஒரு புதிய கட்டத்தைத் தொடக்கமாக்க வேண்டும்,” என புனிதன் உருக்கமாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset